அவனா நானா பார்த்திரலாம்... காலில் விழுந்த காதலன் வில்லனான கொடுமை..! கசந்தது காதல் திருமணம்
Published : Jan 19, 2024 6:50 AM
அவனா நானா பார்த்திரலாம்... காலில் விழுந்த காதலன் வில்லனான கொடுமை..! கசந்தது காதல் திருமணம்
Jan 19, 2024 6:50 AM
காதலித்து திருமணம் செய்து கொண்டு, இருபதே நாட்களில் கைவிட்டு சென்னைக்கு சென்ற காதல் கணவன் பொங்கல் கொண்டாட ஊருக்கு வந்த போது தாக்குதல் நடத்தியதாக கூறி, காதல் மனைவி காவல் நிலையம் முன்பு கதறி அழும் நிலைக்கு தள்ளப்பட்டார்.
சமாதான பேச்சுவார்த்தைக்கு வந்த இடத்தில் காவல் நிலையத்தில் வைத்து தன்னை தாக்கி விட்டு காதல் கணவன் ஓடிவிட்டதாக கூறி கண்ணீருடன் தவித்து நின்ற பெண் இவர் தான்..!
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் வட்டத்திற்குட்பட்ட மனக்கரை பகுதியைச் சேர்ந்த பிரகதீஸ்வரன் சென்னையில் உள்ள ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் நாகை மாவட்டம் செம்பியன் மகாதேவி பகுதியைச் சேர்ந்த கோவில் அர்ச்சகரான மோகன குரு என்பவரின் மகள் பிரியதர்ஷினியை காதலித்து , கடந்த ஆண்டு காதலர் தினத்தன்று ஊர் மக்கள் முன்னிலையில் கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டார்
ஒரு மாதமே பிரியதர்ஷினியுடன் குடும்பம் நடத்திய நிலையில் மனைவியின் நகைகளை பெற்று அடகு வைத்து விட்டு சென்னைக்கு வேலைக்கு செல்வதாக கூறிச் சென்ற பிரகதீஸ்வரன் திரும்பி வரவில்லை. தொலைபேசியில் தொடர்பு கொண்ட போதும் உரிய பதில் அளிக்காமல் தவிர்த்ததாக கூறப்படுகின்றது. இந்த நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கணவன் தன்னுடன் சேர்ந்து வாழ மறுப்பதாகவும் தன்னுடன் கணவனை சேர்த்து வைக்க வேண்டும் என்று மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் பிரியதர்ஷினி புகார் அளித்தார். இது குறித்து விசாரிக்க திருவாரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு உத்தரவிடப்பட்டது.
திருவாரூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் சத்யா , புகாரை முறையாக விசாரிக்காமல் கிடப்பில் போட்டதாக கூறப்படுகிறது.இந்த நிலையில் பொங்கல் கொண்டாட சொந்த ஊருக்கு பிரகதீஸ்வரன் வந்திருக்கும் தகவல் அறிந்து வியாழக்கிழமை விசாரணைக்காக இரு தரப்பினரையும் காவல் நிலையத்திற்கு மகளிர் காவல் நிலைய போலீசார்அழைத்தனர். அப்போது குடும்பத்துடன் அங்கு வந்த பிரகதீஸ்வரன் , தன்னிடம் வாக்குவாதம் செய்து, தன்னையும், தனது தந்தையையும் தாக்கி விட்டு தப்பிச்சென்றதாக கூறி பிரியதர்ஷினி காவல் நிலையம் முன்பு நின்று கதறி அழும் நிலைக்கு தள்ளப்பட்டார்
போன வருஷம் தீபாவளியின் போது கொடுத்த புகாருக்கு இதுவரை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் பத்து முறை காவல் நிலையத்திற்கு வந்தும் பிரகதீஸ்வரனை அழைத்து எவ்வித விசாரணையும் நடத்தவில்லை என்று பிரியதர்ஷினியின் தந்தை குற்றச்சாட்டினார்.
காலில் விழுந்து கெஞ்சிக்கேட்டதால் காதலில் விழுந்து தாலிக் கட்டிக் கொண்டு தவித்து நிற்பதாக கண்ணீருடன் தெரிவித்தார் பிரியதர்ஷினி