​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
டாடா சஃபாரி காருடன் சாலையில் உருண்டு பறந்த ஃபைனான்ஸ் அதிபர் குடும்பம்..! அதி வேகத்தால் இருவர் பலி

Published : Jan 18, 2024 6:52 PM



டாடா சஃபாரி காருடன் சாலையில் உருண்டு பறந்த ஃபைனான்ஸ் அதிபர் குடும்பம்..! அதி வேகத்தால் இருவர் பலி

Jan 18, 2024 6:52 PM

புத்தம் புதிய டாடா சஃபாரி காரில் பொங்கலுக்கு சொந்த ஊருக்கு சென்று விட்டு மீஞ்சூர் திரும்பிய ஃபைனான்ஸ் அதிபர் குடும்பம் , டிராக்டர் மீது மோதிய விபத்தில் காருடன் தூக்கி வீசப்பட்டனர்.

பெண்ணின் அதிவேக டிரைவிங்கால் நிகழ்ந்த விபரீத விபத்து குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு.

பில்ட் குவாலிட்டிக்கு பெயர் பெற்ற டாடா நிறுவனத்தின் சஃபாரி கார் தான் இது...

முன்னால் சென்ற டிராக்டர் மீது மோதிய விபரீத சாலை விபத்தில் சிக்கி இரு சக்கரங்களையும் இழந்து .. நசுங்கி போன அலுமினிய சொம்பு போல காட்சி அளிக்கின்றது..!

திருவள்ளூர் மாவட்டம் , மீஞ்சூரில் வேலவன் ஏஜெண்ஸீஸ் என்ற பெயரில் ஃப்பைனான்ஸ், ஃபேன்ஸி ஸ்டோர் உள்ளிட்டவற்றை நடத்திவரும் சண்முகம் - மகேஸ்வரி தம்பதியினருக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருந்தனர்.

பொங்கல் அன்று வீட்டில் பொங்கலிட்டு முடித்து தங்களது புத்தம் புதிய டாடா சஃபாரி காரில் , சொந்த ஊரான ஒட்டன்சத்திரம் சென்றனர். அங்கிருந்து பழனி முருகன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் முடித்து விட்டு மீஞ்சூருக்கு திரும்பிக்கொண்டிருந்தனர். காரை மகேஸ்வரி ஓட்டி வந்துள்ளார்.

சாலையில் வாகன நெரிசல் ஏதுமில்லாததால் காரை அதிவேகத்தில் ஓட்டிச்சென்றதாக கூறப்படுகின்றது.

சம்பவத்தன்று காலை ஒன்பதரை மணிக்கு கார் வண்டலூர் வெளிவட்டசாலையில் மீஞ்சூர் நோக்கி சென்று கொண்டிருந்த போது முன்னாள் சென்ற டிராக்டர் மீது மோதியதால்,

மோதிய வேகத்தில் சாலையில் உருண்டு பறந்த டாடா சஃபாரி கார் கரப்பான்பூச்சி போல தலைக்குப்புற கவிழ்ந்தது , அதன் இருசக்கரங்கள் உடைந்து தனியாக சென்ற நிலையில் மொத்த காரும் உருக்குலைந்தது.

காரை ஓட்டிய மகேஸ்வரிக்கும், முன் இருக்கையில் அமர்ந்திருந்த கணவர் சண்முகத்துக்கும் கையில் எலும்பு முறிவு ஏற்பட்ட நிலையில், சட்டக்கல்லூரி படித்து வந்த அவரது மகள் மற்றும் மகன் ஆகியோர் பரிதாபமாக பலியாகினர்

டிராக்டர் சாலை தடுப்புக் கம்பியில் மோதி பக்கவாட்டில் உள்ள பள்ளத்தில் குட்டிக்கரணம் அடித்தது.

டிராக்டருடன் கூடிய டிரைலரின் இரு சக்கரங்களும் உடைந்து தனியாக ஓடியது.

டிராக்டர் ஓட்டுனர் பலத்த காயங்களுடன் ஸ்டேன்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்

சம்பவ இடத்தை சுற்றிலும் காரின் உடைந்த பாகங்கள் சாலையில் சிதறிகிடந்தன

கார் ஓட்டுவதில் வல்லவர் என உள்ளூர் வாசிகளால் அழைக்கப்படும் மகேஸ்வரியின் அதிவேகம், மற்றும் கவனக்குறைவு காரணமாக இந்த விபரீத விபத்து நிகழ்ந்திருப்பதாக தெரிவிக்கும் போக்குவரத்து காவலர்கள், வெளிவட்ட சாலையை பயன்படுத்தும் வாகன ஓட்டிகள் அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டும் 100 கிலோ மீட்டர் வேகத்துக்கு செல்லலாம் என்றும் மற்ற இடங்களில் மிகுந்த கவனத்துடன் வாகனத்தை இயக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளனர்.