800-க்கும் அதிகமான காளைகள் களம் கண்ட மதுரை பாலமேட்டில் 14 காளைகளை அடக்கிய, மதுரை பொதும்புவைச் சேர்ந்த இளைஞர் காரை பரிசாக தட்டிச் சென்றார்.
காளைகளுக்கு ஊறு விளைவிக்க மாட்டோம் என வீரர்கள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டதும் விறுவிறுப்பாக துவங்கியது, பாலமேடு ஜல்லிக்கட்டு.
மஞ்சமலையாறு வாடிவாசல் திறந்ததும் வீரர்களின் கையில் சிக்காமல் சிட்டாக பறந்தன சில காளைகள். சீறிப் பாய்ந்த வேறு சில காளைகளின் திமிலை இறுகப் பற்றி வெற்றி பெற்றனர், மாடு பிடி வீரர்கள்.
பெண் உரிமையாளர்கள் சிலர் களமிறக்கிய காளைகள் எதிர்த்துத் தழுவ ஆளில்லாமல் துள்ளிக் குதித்து ஓடின.
பாலமேட்டைச் சேர்ந்த அன்னலட்சுமி என்ற சிறுமியின் மாடும் எதிர்த்து நிற்க ஆளின்றி வெற்றி பெற்றது. அவருக்கு தங்கக் காசு, சைக்கிள், பிளாஸ்டிக் நாற்காலி போன்ற பரிசுகள் வழங்கப்பட்டன. அப்போது, உங்கள் ஊர்க்காரர்களுக்கு மட்டும் அதிக பரிசு போடுகிறீர்களா என்று விழாக்குழுவினரிடம் நகைச்சுவையாக கேட்டார், அமைச்சர் மூர்த்தி.
களத்தில் நின்று விளையாடிய புதுக்கோட்டை ராயவயல் ராக்கெட் கருப்பன் காளை யாரும் நெருங்க முடியாத அளவுக்கு ஆட்டம் காட்டியது.
ஒரு சில காளைகள் வீரர்களிடம் சிக்காமல் லாவகமாக தப்பிச் சென்றன. அவற்றில் சில காளைகள் மீண்டும் களத்துக்குத் திரும்பி வந்து இங்கிருந்தவர்களை மிரளச் செய்தன.
களம் கண்ட ஒரு சில காளைகளை நெருங்கக் கூட இயலாமல் சுற்றி இருந்த தடுப்பு வேலிகளின் மீது வீரர்கள் ஏறிக் கொண்டனர்.
யாரிடமும் பிடிபடாத மதுரையைச் சேர்ந்த காளை ஒன்று சிறிது நேரம் களத்தில் இருந்த மண்ணைக் குத்திக் கிளறி கெத்து காட்டியது.
2020-இல் முதல் இடத்தை வென்ற பொதும்பைச் சேர்ந்த பிரபாகரன், இந்தாண்டு 14 காளைகளை அடக்கி முதல் பரிசான காரை வென்றார்.
வீரர்களை உற்சாகப்படுத்தும் வகையில் ஜல்லிக்கட்டை காண வந்த நடிகர் சூரி, அலங்காநல்லூரில் தனது காளை களமிறங்க உள்ளதாக கூறினார்.