பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்களின் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் குஜராத்தின் காந்தி நகரில் 'வைப்ரண்ட் குஜராத்' உலகளாவிய வர்த்தக உச்சிமாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ளார். முதலமைச்சராக பிரதமர் மோடி இருந்தபோது முதன்முறையாக நடத்தப்பட்ட 'வைப்ரண்ட் குஜராத்' மாநாடு தற்போது தற்போது 10-வது பதிப்பை எட்டியுள்ளது.
மாநாட்டில் ஐக்கிய அரபு அமீரகம், செக் குடியரசு, மொசாம்பிக் உள்ளிட்ட நாடுகளின் தலைவர்களும், முன்னணி தொழில் நிறுவங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளும் பங்கேற்றுள்ளனர்.
நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, சர்வதேச அளவிலான கடின சூழலிலும் இந்திய பொருளாதாரம் வலிமையாக இருப்பதற்கு, கடந்த 10 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட கட்டமைப்புச் சீர்திருத்தங்களே மிக முக்கிய காரணம் என தெரிவித்துள்ளார்.
இந்தியாவை உலக நாடுகள் ஸ்திரத்தன்மையின் முக்கிய தூணாக, நம்பகமான நண்பனாகவும், சர்வதேச பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கான எஞ்சினாகவும் பார்ப்பதாக அவர் கூறியுள்ளார்.
மாநாட்டிற்கு இடையே, செக் குடியரசு பிரதமர் ஃபியாலாவுடன் பிரதமர் மோடி இருதரப்பு பேச்சுவார்த்தை மேற்கொண்டார்.