​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சென்னையில் நடந்து முடிந்த 2 நாள் முதலீட்டாளர் மாநாடு! ரூ. 6,64,180 கோடிக்கான முதலீடுகள் ஈர்ப்பு..!!

Published : Jan 08, 2024 10:10 PM



சென்னையில் நடந்து முடிந்த 2 நாள் முதலீட்டாளர் மாநாடு! ரூ. 6,64,180 கோடிக்கான முதலீடுகள் ஈர்ப்பு..!!

Jan 08, 2024 10:10 PM

உலக முதலீட்டாளர் மாநாட்டின் மூலம் 6 லட்சத்து 64 ஆயிரத்து 180 கோடி ரூபாய் முதலீடு ஈர்க்கப் பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறினார்.

சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் 2 நாட்கள் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ், ஜப்பான் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 450-க்கும் மேற்பட்ட தொழில் நிறுவன பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

70-க்கும் அதிகமான அரங்கங்களில் தங்கள் உற்பத்திகளை பல்வேறு நிறுவனங்கள் காட்சிப்படுத்தி இருந்தன. 

முதலீட்டாளர்களை உற்சாகப்படுத்தும் வகையில் நடிகை ஆண்ட்ரியாவின் இசை நிகழ்ச்சி உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

டாடா, அதானி, செம்கார்ப், லீட் கிரீன் எனர்ஜி, சி.பி.சி.எல்., போயிங், ஹைலி குளோரி, ஜாங், ஃபெங் தேய், மைக்ரோசாஃப்ட், எல் அண்ட் டி, செயிண்ட் கோபைன், ராயல் என்ஃபீல்டு, மஹிந்திரா உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் புதிய ஆலை அமைக்கவும், விரிவாக்கம் செய்யவும் முதலமைச்சர் முன்னிலையில் தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டன.

மாநாட்டில் நிறைவுரையாற்றிய முதலமைச்சர், தற்போது ஈர்க்கப்பட்ட முதலீடுகள் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் மொத்தம் 26,90,657 பேருக்கு வேலை வாய்ப்புகள் உருவாகும் என்று கூறினார்.

மாநாட்டில் தொழிற்சாலைகள், முதலீடு ஊக்குவிப்பு மற்றும் வணிகத் துறை சார்பில் 3,79,809 கோடி ரூபாய் முதலீட்டுக்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளதாகவும் எரிசக்தித் துறையில் 1,35,157 கோடி ரூபாயும், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையில் 62,939 கோடி ரூபாயும், தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறையில் 22,130 கோடி ரூபாயும், சிறு குறு மற்றும் நடுத்தர தொழிற்துறையில் 63,573 கோடி ரூபாயும் முதலீடு பெறும் வகையில் புரிந்துணர்வுகள் பரிமாறிக் கொள்ளப்பட்டதாகவும் முதலமைச்சர் தெரிவித்தார். 

புரிந்துணர்வு ஒப்பந்தங்களை கண்காணிக்க தொழில்துறை அமைச்சர் தலைமையில் சிறப்பு குழு அமைக்கப்படும் என்று தெரிவித்த முதலமைச்சர், முதலீடு செய்வோருக்கு ஒற்றைச் சாளர முறையில் அனுமதி அளிக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.


மாநாட்டிற்குப் பின் பேட்டியளித்த அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, மேலும் முதலீடுகளை ஈர்க்க முதலமைச்சர் தலைமையிலான குழு ஸ்பெயின், ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்காவுக்கு வரும் 28-ஆம் தேதி முதல் செல்ல இருப்பதாக தெரிவித்தார்.