​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இஸ்ரோ மணி மகுடத்தில் மற்றொரு வைரக் கல்..! சூரியனை ஆராய எல்-1 புள்ளியில் நிலைநிறுத்தப்பட்ட ஆதித்யா!!

Published : Jan 06, 2024 4:24 PM



இஸ்ரோ மணி மகுடத்தில் மற்றொரு வைரக் கல்..! சூரியனை ஆராய எல்-1 புள்ளியில் நிலைநிறுத்தப்பட்ட ஆதித்யா!!

Jan 06, 2024 4:24 PM

ஆதித்யா விண்கலம் சூரியனுக்கும் பூமிக்கும் இடையிலான புவி ஈர்ப்பு விசையில்லா எல்-1 ஹாலோ சுற்றுவட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டுள்ளது.

சூரியனை ஆய்வு செய்ய, கடந்த செப்டம்பர் 2-ஆம் தேதி ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.சி. சி-57 மூலம் ஏவப்பட்டது, ஆதித்யா எல்-1 விண்கலம்.

சந்திரயான்-3 போன்றே நீள் வட்டப்பாதையில் பூமியைச் சுற்றி வந்து, படிப்படியாக சுற்றுப்பாதையை அதிகரித்து சூரியனை நோக்கி சுமார் 15 லட்சம் கிலோ மீட்டர் தூரம் பயணித்து முதல் லெக்ராஞ்சியன் புள்ளியை அடைந்துள்ளது, ஆதித்யா எல்-1.

லெக்ராஞ்சியன் புள்ளிக்கு அருகே பூமி மற்றும் சூரியனின் ஈர்ப்பு விசைகள் பூஜ்ஜியமாக உள்ளன. எந்த ஒரு பொருளையும் நிலையாக வைத்திருக்கக் கூடிய எல்-1 புள்ளியில், சூரியனை பூமி சுற்றி வரும் போது, அதற்கு ஏற்ப பின்தொடரும் வகையில் ஆதித்யா விண்கலம் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

பிரபஞ்சத்தின் தோற்றம் மற்றும் எதிர்காலம் பற்றி அறிய நட்சத்திரங்கள் முக்கிய அடிப்படையாக இருக்கின்றன. பூமிக்கு மிக அருகிலுள்ள நட்சத்திரமான சூரியனை ஆராய்வதன் மூலம் பிரபஞ்சத்தைப் பற்றிய கூடுதல் தகவல்களை அறிய முடியும். இதுதவிர, சூரியனில் தொடர்ச்சியான அணுக்கரு இணைவு மூலம் ஏற்படும் சூரியப் புயல்கள் பூமியை நோக்கி விரைந்தால், அதன் தாக்கம் பல இடையூறுகளை ஏற்படுத்தக் கூடும் என்பது விஞ்ஞானிகள் கூறும் தகவல். இதற்காக சூரியனின் மேற்பரப்பில் உள்ள கரோனாவின் வெப்பநிலை மாற்றங்கள், அது வெளிப்படுத்தும் பொருண்மை, குரோமோஸ்ஃபியரின் செயல்பாடு உள்ளிட்டவற்றை ஆதித்யா எல்-1 தொடர்ந்து கண்காணிக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதற்காக ஆதித்யா எல்-1 இல் ஏழு கருவிகள் உள்ளன.

ஏழில் நான்கு கருவிகள் தொடர்ந்து சூரியனை நோக்கிய படி ஆராய்ச்சி செய்யும். எஞ்சிய மூன்று கருவிகள் லெக்ராஞ்சியன் புள்ளி 1-க்கு அருகில் உள்ள நிலைமைகளை ஆய்வு செய்து அதில் கிடைக்கும் தகவல்களை இஸ்ரோவுக்கு அனுப்பும் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.n

ஏற்கனவே சூரியனின் படங்களை ஆதித்யா எல்-1, பூமிக்கு அனுப்பி உள்ளது. தொடர்ந்து அறிவியல் சோதனைகளுக்காக சூரியனின் பல்வேறு கோணங்களின் படங்களையும் ஆதித்யா விண்கலம் 5 ஆண்டுகளுக்கு தொடர்ந்து அனுப்பும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.