​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அந்த 3 பேரும் இங்க வரணும்.. கத்தியை போட்டு பெண்கள் ஆவேச மறியால் பரபரப்பு..! மிரண்டு நின்ற போலீசார்

Published : Jan 03, 2024 7:53 AM



அந்த 3 பேரும் இங்க வரணும்.. கத்தியை போட்டு பெண்கள் ஆவேச மறியால் பரபரப்பு..! மிரண்டு நின்ற போலீசார்

Jan 03, 2024 7:53 AM

திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு அருகே கத்தியை காண்பித்து மிரட்டிய பைக் ரேசிங் இளைஞர்களை ஊர் மக்கள் சுற்றிவளைத்த நிலையில், அந்த போதை இளைஞர்கள் பைக்கில் தப்பிச்சென்றனர். 2 அடி நீள கத்தியை சாலையில் போட்டு பெண்கள் மறியலில் ஈடுபட்ட பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு..

நூறு நாள் வேலைக்கு சென்று வந்த பெண்களிடம் கத்தியை காட்டி மிரட்டிய கஞ்சா குடிக்கி இளைஞர்களை கைது செய்யகோரி கத்தியுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்ட காட்சிகள் தான் இவை..!

திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு ஒன்றியம் பூனி மாங்காடு கிராமத்தில் ஆந்திரா செல்லும் சாலையில் கிராம மக்கள் 100 நாள் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்பொழுது இருசக்கர வாகனத்தில் மூன்று இளைஞர்கள் அதி வேகமாக எதிரே வந்த பெண்கள் மீது மோதுவது போன்று வேகமாக சென்றுள்ளனர். அதனை பார்த்த கிராம மக்கள் பொறுமையாக செல்லும்படி அறிவுறுத்தினர்.

கஞ்சா போதையில் இருந்த அந்த இளைஞர்கள் மீண்டும் வேகமாக திரும்பி வந்து அங்கே நின்று கொண்டு இருந்த கிருஷ்ணன் என்பவரை கொலை செய்து விடுவேன் என்று 2 அடி நீள கத்தியை காட்டி மிரட்டி உள்ளனர். அதனைப் பார்த்த பெண்கள் ஒன்று கூடவே அங்கிருந்து வேகமாக தப்பிச்செல்ல முயன்ற கஞ்சா போதை இளைஞர்கள் அருகில் இருந்த மரத்தின் மீது மோதி கீழே விழுந்துள்ளனர். உடனடியாக அங்கிருந்த சிலர் அவர்களை செல்போனில் படம் பிடித்தனர்.

அவர்களை மடக்கிப்பிடிக்க முயன்ற போது பெண்களிடம், இளைஞர்கள் கத்தியை காட்டி மிரட்டி உள்ளனர். அதில் ஒரு பட்டா கத்தியை தவற விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். அவர்கள் விட்டுச் சென்ற கத்தியை எடுத்து சாலையில் வைத்து பெண்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் போதை இளைஞர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று சாலை மறியலில் ஈடுபட்டனர்

தங்களுக்கு எந்தவித பாதுகாப்பும் இல்லை என்று ஆதங்கப்பட்ட பெண்கள், அந்த மூன்று பேரையும் போலீசார் இங்கு அழைத்து வர வேண்டும் என்று ஆவேசமாக தெரிவித்தனர்

சம்பந்தப்பட்ட இளைஞர்களின் புகைப்படங்களை போலீசாரிடம் வழங்கிய நிலையில் அவர்களை விரைவாக கைது செய்வதாக போலீசார் உறுதி அளித்ததை தொடர்ந்து மறியலை கைவிட்டனர். கஞ்சா போதைக்கு அடிமையாகும் இளசுகள் பைக்குகளில் அதிவேகமாக செல்வதோடு, கைகளில் கத்தி போன்ற ஆயுதங்களுடன் வலம்வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.