2024-ஆம் ஆண்டு பிறந்ததை உலகம் முழுவதும் பிரசித்தி பெற்ற இடங்களில் பொது மக்கள் கூடி உற்சாகமாக கொண்டாடினர்.
ஆக்லாந்து ஸ்கை டவரில் கவுண்ட் டவுன் முடிந்து 12 மணி அடித்ததும் கண்ணைக் கவரும் வாண வேடிக்கைகளுடன் 2024-ஆம் ஆண்டை வரவேற்றது நியூஸிலாந்து.
ஆஸ்திரேலியாவின் சிட்னி துறைமுக பாலத்தில் வழக்கமான உற்சாகத்துடன் நடைபெற்ற புத்தாண்டு வாண வேடிக்கைகள் இரவு வானத்தை ஒளி வெள்ளத்தில் நிரப்பின.
ஹாங்காங் விக்டோரியா துறைமுகத்தில் புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு 12 நிமிட நேரம் இடைவிடாமல் வாண வேடிக்கைகளுடன் கூடிய இசை நிகழ்ச்சி அரங்கேற்றப்பட்டது.
தாய்வானிலேயே மிக உயர்ந்த கட்டிடமான தாய்பெய் 101-இல் இருந்து நிகழ்த்தப்பட்ட வாண வேடிக்கைகளுடன் புத்தாண்டை வரவேற்றனர், அந்நாட்டு மக்கள்.
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில், சாவோ ஃபிராயா ஆற்றின் கரையில் நடைபெற்ற புத்தாண்டு நிகழ்ச்சியில் உள்ளூர் மக்களும் சுற்றுலா பயணிகளும் பங்கேற்றனர்.
துபாயில் புத்தாண்டை வரவேற்கும் வகையில் வண்ணமயமாக ஜொலித்த புர்ஜ் கலிஃபா கட்டிடத்தில் இருந்து பிராமாண்டமான வாண வேடிக்கைகள் நிகழ்த்தப்பட்டன.
கிரேக்க நாட்டில் பழமைவாய்ந்த ஏதென்ஸ் நகரின் பார்த்தினன் கோயிலில் நடந்த வண்ணமயமான வாண வேடிக்கை நிகழ்ச்சிகளில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
ஜெர்மனி தலைநகர் பெர்லினின் அடையாளமான பிரண்டன்பர்க் வாயிலில் நடைபெற்ற புத்தாண்டு விழாவிலும் வாண வேடிக்கைகளின் ஜாலம் நிகழ்த்தப்பட்டது.
பிரிட்டன் தலைநகர் லண்டனில் பிரசித்தி பெற்ற பிக் பென் கடிகாரத்தில் சின்ன முள்ளும் பெரிய முள்ளும் முத்தமிட்டுக் கொண்ட உடன் விண்ணதிரும் புத்தாண்டு நிகழ்ச்சிகள் அரங்கேறின.
பிரேசிலின் ரியோ டி ஜெனீரோ நகரின் கோபாகபானா கடற்கரையில் கூடிய ஏராளமானோர் நள்ளிரவு 12 மணி ஆனதும் வாழ்த்துகளை பரிமாறி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
அமெரிக்காவின் நியூ யார்க் நகர டைம்ஸ் சதுக்கத்தில் கூடிய ஆயிரக்கணக்கானோர் கவுண்ட் டவுன் முடிந்ததும் ஆடிப்பாடி புத்தாண்டை வரவேற்றனர்.