திறக்கப்பட்டது கிளாம்பாக்கம் பேருந்து முனையம்.. இனி பெருநகரில் குறையுமா போக்குவரத்து நெரிசல்?
Published : Dec 30, 2023 10:06 PM
திறக்கப்பட்டது கிளாம்பாக்கம் பேருந்து முனையம்.. இனி பெருநகரில் குறையுமா போக்குவரத்து நெரிசல்?
Dec 30, 2023 10:06 PM
சென்னையை அடுத்த கிளாம்பாக்கத்தில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன் 400 கோடி ரூபாயில் கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார்.
வண்டலூர் உயிரியல் பூங்கா அருகே ஜி.எஸ்.டி சாலையில் 88.52 ஏக்கர் பரப்பில் 60 ஆயிரத்து 652 சதுர அடியில் கட்டப்பட்டுள்ளது, கிளாம்பாக்கம் பேருந்து முனையம். கோயம்பேடு மற்றும் புறநகரில் நெரிசலைக் குறைக்கும் வகையிலும் தென் மாவட்டங்களுக்கு பயணம் மேற்கொள்ள வசதியாகவும் அமைக்கப்பட்டுள்ள இந்த முனையத்தை திறந்து வைத்தார், முதலமைச்சர் ஸ்டாலின்.
பேருந்து நிலைய வளாகத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி சிலையைத் திறந்துவைத்த முதலமைச்சர், தொடர்ந்து பேருந்துகளை கொடியசைத்து தொடங்கிவைத்தார்.
பேருந்து நிலையத்துக்குள் மருத்துவமனை, 4 பெரிய உணவகங்கள், 100 கடைகள், 12 இடங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி, 500க்கும் மேற்பட்ட கழிவறைகள் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 300-க்கும் மேற்பட்ட கார்கள், 2800 இரு சக்கர வாகனங்கள் நிறுத்தும் வகையில் 2 அடுக்கு பார்க்கிங், நகரும் படிக்கட்டுகள், மின் தூக்கிகள் உள்ளிட்டவையும் அமைக்கப்பட்டுள்ளன.
திறப்பு விழாவுக்குப் பின் பேட்டியளித்த தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர், சென்னையின் அனைத்து பகுதிகளில் இருந்தும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு மாநகர பேருந்துகள் இயக்கப்படுவதாக கூறினார். விழுப்புரம், கும்பகோணம், திருநெல்வேலி, மதுரை உள்ளிட்ட 6 கோட்டங்களைச் சேர்ந்த பேருந்துகள் பொங்கல் வரை எப்போதும் போல கோயம்பேட்டில் இருந்தே புறப்படும் என்றும் பொங்கலுக்குப் பிறகு 4 ஆயிரத்து 77 பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
ஆம்னி பேருந்துகளைப் பொருத்தவரை பொங்கல் வரை கோயம்பேட்டில் இருந்து இயக்கப்படும் என்றும் அதன் பின்னர் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படும் என்று அமைச்சர் கூறினார்.
தென் தமிழ்நாட்டில் இருந்து வருகின்ற அனைத்து அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளும் ஞாயிறு முதல் கிளாம்பாக்கத்திலேயே நின்றுவிடும் என்று அவர் கூறினார். கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து கோயம்பேட்டுக்கு 5 நிமிடத்திற்கு ஒரு பேருந்தும் தாம்பரம் பகுதிக்கு இரண்டு நிமிடங்களுக்கு ஒரு பேருந்தும் கிண்டிக்கு மூன்று நிமிடங்களுக்கு ஒரு பேருந்தும் இயக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.