ஊரெல்லாம் தண்ணீர்.. 125 குளங்கள் காலியாம்.. தூத்துக்குடி விவசாயிகள் வேதனை..!
Published : Dec 30, 2023 10:52 AM
ஊரெல்லாம் தண்ணீர்.. 125 குளங்கள் காலியாம்.. தூத்துக்குடி விவசாயிகள் வேதனை..!
Dec 30, 2023 10:52 AM
தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை காரணமாகவும் , தாமிரபரணியில் திறந்துவிடப்பட்ட அளவுக்கதிகமான உபரி நீராலும் ஒரே நாளில் 400க்கும் மேற்பட்ட குளங்கள் நிரம்பிய நிலையில் அதில் 125க்கும் மேற்பட்ட குளங்கள் உடைந்து மொத்த நீரும் வீணாகி போனதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்ட விவசாயிகளின் வாழ்க்கைக்கு வளம் சேர்த்த ஏரி குளங்களே அவர்களின் வாழ்க்கையை புரட்டி போட்ட சோக காட்சிகள் தான் இவை..!
தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி பாசனத்தின் கீழ் 53 குளங்களும் ஊரக வளர்ச்சி திட்டத்தின் கீழ் 408 குளங்களும் உள்ளன. தாமிரபரணி பாசனத்திற்கு உள்ள குளங்களுக்கு பாபநாசம் , மணிமுத்தாறு அணைகளில் திறக்கப்படும் தண்ணீர் தாமிரபரணி ஆற்றின் வடகால், தென்கால் வழியாக வந்து நிரம்பும்.
இதே போல் ஊரக வளர்ச்சி திட்டத்தின் கீழ் உள்ள 408 குளங்களும் மழை மற்றும் காட்டாற்று வெள்ளத்தின் மூலம் நிரப்பப்படுகின்றன. வறண்டு கிடந்த இந்த குளங்கள் அனைத்தும் கடந்த 17, 18 ஆகிய இரு தினங்களில் பெய்த கனமழை காரணமாகவும், தாமிரபரணி ஆற்றில் திறந்துவிடப்பட்ட அளவுக்கதிகமான உபரி நீரான குளங்கள் ஒரே நாளில் நிரம்பியது.
குளங்களை தூர்வாரி கரைகளை ஆழப்படுத்தாத தவறியதால் இவற்றில் பல குளங்கள் உடைந்து தண்ணீர் வீணாக குடியிருப்புகள், நெல்வயல் மற்றும் வாழைகளை சேதப்படுத்தியதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்
பொதுப்பணித்துறை அதிகாரிகளின் மெத்தனத்தால் தாமிரபரணி பாசனத்திற்கு கீழ் உள்ள 25 குளங்களும், காட்டாற்று வெள்ளத்தால் நிரம்பக்கூடிய 100 குளங்களும் நிடம்பி உடனடியாக உடைந்து தண்ணீர் வீணாக சென்றதாகவும், தற்போது அந்த குளங்களில் தண்ணீர் இல்லாமல் காலியாகி புல்மேடாக காட்சியளிப்பதாக விவசாயிகள் குற்றஞ்சாட்டுகின்றனர். அதில் முக்கியமானவை கோரம்பள்ளம் மற்றும் கடம்பா குளங்கள்..!
தாமிரபரணி தென்கால் பாசன பகுதியில் அமைந்துள்ளது 1500 ஏக்கர் பரப்பளவுள்ள கடம்பா குளம். 34 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கடந்த ஜனவரியில் தூர்வாரப்பட்டு புதிதாக மதகுகள் அமைக்கப்பட்ட நிலையில் மதகுகளை உரிய காலத்தில் திறக்காததால் 3 இடங்களில் உடைப்பு ஏற்பட்டு மனத்தி, கல்லாமறை, ராஜபதி, சொக்கபழங்கரை, மரந்தலை, சுகந்தலை, மேலாத்தூர்,உள்ளிட்ட ஏராளமான ஊர்கள பேரழிவை சந்தித்ததுடன் அம்மன் புரம் குளம், நல்லூர் மேல் குளம் கீழ் குளம் உள்ளிட்ட 12 குளங்களுக்கு பாசனத்துக்காக செல்ல வேண்டிய மொத்த நீருக்கும் ஊருக்குள் வீணாக பாய்ந்ததாக விவசாயிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்
தாமிரபரணி வடகால் பாசன பகுதியில் 1,300 ஏக்கர் நிலப்பரப்பளவில் விரிந்து காணப்படும் கோரம்பள்ளம் குளம் முக்கியமானது. 1888-ம் ஆண்டு ஆங்கிலேயர்களால் தண்ணீரை சேமிக்கவும், உபரி நீரை வெளி யேற்றவும் 48 கண் மதகு கொண்ட பிரமாண்ட கண்மாய் ஒன்றையும் அமைத்தனர். காலப்போக்கில் மதகுகள் சேதமடைந்ததால், 1967-ல் இவை 24 பெரிய மதகுகளாக மாற்றி அமைக்கப்பட்டதாக கூறப்படுகின்றது. கடம்பூர், கயத்தாறு, மணியாச்சி, கொம்பாடி, செக்காரக்குடி, உமரிக்கோட்டை ஆகிய பகுதிகளில் பெய்யும் மழை நீர் காட்டாற்று வெள்ளமாக மாறி உப்பாற்று ஓடை வழியாக கோரம்பள்ளம் குளத்திற்கு வந்து சேரும்.
பல ஆண்டுகளாக தூர்வாராமல் கிடக்கும் கோரம்பள்ளம் குளக்கரை இரு இடங்களில் உடைத்ததால், இந்த பாசனத்தை நம்பி பயன்பெற்ற கோரம்பள்ளம், பெரியநாயகிபுரம், அத்திமரப்பட்டி, முத்தையாபுரம், வீரநாயக்கன்தட்டு, முள்ளக்காடு, சிறுப்பாடு கிராம பகுதிகளில் 2000 ஏக்கரில் பயிரிடப்பட்ட நெல், வாழைப் பயிர்கள் அழிந்து பெரும் இழப்பை சந்தித்திருப்பதாக விவசாயிகள் தெரிவித்தனர்
இந்த குளத்தில் ஏற்பட்ட உடைப்பால் தான் அந்தோணியார் புரம் அருகே உள்ள நான்கு வழிச்சாலை உடைப்பு ஏற்பட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் மற்றும் நகரப் பகுதிகளிலும் பெரு வெள்ளம் சூழ்ந்ததாக மக்கள் தெரிவித்தனர்
எல்லா தண்ணீரும் வீணாய் போன பின்னர் கோரம்பள்ளம் குளம் கரையை மற்றும் உப்பாற்று ஓடையில் உடைக்கப்பட்டு பகுதியில் பேட்மா நகரத்தில் இருந்து சுமார் 1000 லாரிகள் மூலம் டிராவல் மண் கொண்டு வந்து கரையை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
கோரம்பள்ளம் மற்றும் கடம்பா குளம் இரண்டையுமே பொதுப்பணித்துறையினர் திறந்து விடாமல் அலட்சியமாக இருந்ததால் தான் இரு குளங்களும் நிரம்பி அழுத்தம் தாங்காமல் உடைப்பு ஏற்பட்டதாகவும் விவசாயிகள் குற்றஞ்சாட்டினர்
கோரம்பள்ளம் குளத்தில் ஒரு பகுதி குடிநீருக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது . அந்த குளகரையில் பனை மரங்கள் இருப்பதால் பெரிய அளவில் உடைப்பு ஏற்படாமல் தப்பியதாக கூறப்படுகின்றது.