​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கதறிய தொண்டர்கள்..! கண்ணீரில் ரசிகர்கள்..!! கேப்டனுக்கு பிரியாவிடை!

Published : Dec 30, 2023 6:54 AM



கதறிய தொண்டர்கள்..! கண்ணீரில் ரசிகர்கள்..!! கேப்டனுக்கு பிரியாவிடை!

Dec 30, 2023 6:54 AM

விஜயகாந்துக்கு அரசியல் கட்சிப் பிரமுகர்கள், திரைத்துறையினர், கட்சித் தொண்டர்கள் திரளாக இறுதி மரியாதை செலுத்தினர். தீவுத்திடலில் இருந்து கோயம்பேடு வரை 3 மணி நேரம் நடைபெற்ற இறுதி ஊர்வலத்தில் வழியெங்கும் பல்லாயிரக்கணக்கானோர் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ, த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன், கொ.ம.தே.க. தலைவர் ஈஸ்வரன், நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் விஜயகாந்த் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினர்.

நடிகர்கள் ராம்கி, ஸ்ரீகாந்த், நந்தா, லிவிங்ஸ்டன், ரமேஷ் கண்ணா, டெல்லி கணேஷ், தாமு, ஜெயபிரகாஷ், அனுமோகன், நடிகைகள் குஷ்பு, நளினி, நிரோஷா உள்ளிட்டோர் விஜயகாந்துக்கு கண்ணீர் மல்க இறுதி அஞ்சலி செலுத்தினர். விஜயகாந்தின் நீண்ட நாள் நண்பர்கள் ராதா ரவி, வாகை சந்திரசேகர் ஆகியோர் தங்கள் நண்பருக்கு பிரியாவிடை அளித்தனர்.

இயக்குநர்கள் பாக்யராஜ், பார்த்திபன், சுரேஷ் கிருஷ்ணா, சித்ரா லட்சுமணன், வசந்த், சுந்தர் சி, ஏ.எல். விஜய், இசையமைப்பாளர் தேவா, அவரது மகன் ஸ்ரீகாந்த் தேவா ஆகியோரும் விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்தினர்.

விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்திய நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன், பிரேமலதா மற்றும் அவரது மகன்களுக்கு ஆறுதல் கூறினர்.

மத்திய அரசு மற்றும் பிரதமர் மோடி சார்பில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மலர் வளையம் வைத்து விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்தினார். பின்னர் பிரேமலதா மற்றும் அவரது மகன்களுக்கு நிர்மலா சீதாராமன் ஆறுதல் தெரிவித்தார். அவருடன் பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை, முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர்.

இறுதியாக ஆளுநர் ஆர்.என். ரவி விஜயகாந்தின் உடலுக்கு மலர் வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தி பிரேமலதாவுக்கு ஆறுதல் கூறினார்.

இதைத் தொடர்ந்து பகல் 2-45 மணிக்கு தீவுத் திடலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட லாரியில் வைத்து விஜயகாந்தின் உடல் கோயம்பேடு தே.மு.தி.க. அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

வழிநெடுகிலும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். கேப்டன், கேப்டன் என்று முழக்கமிட்டபடி பலர் விஜயகாந்தின் உடல் வைக்கப்பட்ட கண்ணாடி பேழை மீது மலர்களைத் தூவினர்.

விஜயகாந்தின் மகன்கள் விஜய பிரபாகரன் மற்றும் சண்முக பாண்டியன், அஞ்சலி செலுத்திய மக்களுக்கு கண்ணீர் மல்க கைகூப்பி நன்றி தெரிவித்தனர்.