தமிழகம் முழுவதும் தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் களைகட்டின. தேவாலயங்கள் வண்ணமயமான மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.
சென்னை சாந்தோம் புனித தோமையார் ஆலயத்தில் கிறிஸ்துமஸ் சிறப்பு திருப்பலி ஆராதனை நடைபெற்றது. இரவு 9.30 மணிக்கு ஆங்கில மொழியிலும் இரவு 11.30 மணிக்கு தமிழ் மொழியிலும் திருப்பலி நடைபெற்றது. திருப்பலியின்போது குழந்தை ஏசுவின் சொரூபம் குடிலில் உள்ள தொட்டிலில் வைக்கப்பட்டது.
சென்னை பெசண்ட் நகர் தேவாலயத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திலும் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
காஞ்சிபுரம் தூய இருதய அன்னை ஆலயத்தில் கிறிஸ்துமஸ் தினத்தையொட்டி திரளான கிறிஸ்துவர்கள் பங்கேற்று சிறப்பு கூட்டு பிராத்தனையில் ஈடுபட்டனர்.
புதுச்சேரியில் புனித ஜென்மராக்கினி தேவாலயம் உள்ளிட்ட பல்வேறு தேவாலயங்களில் நள்ளிரவு நடைபெற்ற சிறப்பு திருப்பலியில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு சிறப்பு பிரார்த்தனை செய்தனர்.
கிறிஸ்மஸ் பண்டிகையையொட்டி சேலம் நான்கு ரோடு அருகே உள்ள குழந்தை இயேசு பேராலயத்தில் நள்ளிரவு நடந்த சிறப்பு திருப்பலியில் ஆண்கள், பெண்கள், சிறுவர்கள், முதியவர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
புகழ்பெற்ற நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் களைகட்டியது. விண்மீன் ஆலயத்தில் உள்ள சேவியர் திடலில் சிறப்பு கூட்டுப்பாடல் திருப்பலி நடைபெற்றது. தொடர்ந்து ஏசு கிறிஸ்து பிறப்பு நற்செய்தி வாசிக்கப்பட்டு குடிலில் பிறந்த குழந்தை ஏசுவின் பாதத்தில் பாதிரியார்கள் முத்தமிட்டனர்.
இதேபோல், திருவள்ளூர், விழுப்புரம், தூத்துக்குடி, திண்டுக்கல், தேனி, கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள தேவாலயங்களிலும் நள்ளிரவு கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் கோலாகலமாக நடைபெற்றன.