சென்னையில் புயல் மற்றும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வேளச்சேரி, பள்ளிக்கரணை, புளியந்தோப்பு, மணலி, திருவொற்றியூர் உள்ளிட்ட இடங்களில் மத்திய குழுவினர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.
மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ள சேதங்களை ஆய்வு செய்து மதிப்பிட தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய ஆலோசகர் குணால் சத்யார்த்தி தலைமையில் 6 பேர் கொண்ட மத்திய குழுவினர் சென்னை வந்துள்ளனர். இவர்களில் 3 அதிகாரிகள் சென்னை வேளச்சேரி ஏஜிஎஸ் நகர், கல்கி நகர் மற்றும் பள்ளிக்கரணை சாய் பாலாஜி நகர், நாராயணபுரம் ஏரி, பள்ளிக்கரணை சதுப்புநிலம் உள்ளிட்ட பகுதிகளில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய குணால் சத்யார்த்தி, வெள்ள பாதிப்பு மிக மோசமாக காணப்பட்ட நிலையில், உடனடியாக செயல்பட்டு மழை நீரை அகற்றிய தமிழக அரசின் செயல்பாடுகள் திருப்திகரமாக இருப்பதாக தெரிவித்தார். தாழ்வாக உள்ள இப்பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள வடிகால்வாய்களை மேலும் விரிவு படுத்த, ஐஐடி நிபுணர்களைக் கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறினார்.
வட சென்னையில் ஆய்வு மேற்கொண்ட மற்றொரு குழுவினர், பட்டாளம் டிமலஸ் சாலை, புளியந்தோப்பு நெடுஞ்சாலை, கணேசபுரம் சுரங்கப்பாதை, ஸ்டீபன்சன் சாலை ஆகிய இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர். நகராட்சி நிர்வாகத் துறை முதன்மைச் செயலாளர் கார்த்திகேயன், சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் பாதிப்புகள் குறித்து மத்திய குழு அதிகாரிகளுக்கு எடுத்துரைத்தனர்.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஏற்பட்ட வெள்ள சேதங்கள் குறித்து ஆங்காங்கே வைக்கப்பட்ட புகைப்படங்களையும் மத்திய குழுவினர் பார்வையிட்டனர். அப்போது பேட்டியளித்த நெடுஞ்சாலைத்துறை தலைமை பொறியாளர் விஜயகுமார், முழுமையான ஆய்விற்கு பிறகு மத்திய அரசிடம் அறிக்கை தாக்கல் செய்ய இருப்பதாக தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து, வடபெரும்பாக்கம், மணலி, திருவொற்றியூரில் வெள்ளத்தால் சேதமடைந்த இடங்களை மத்தியக் குழுவினர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அவர்களிடம், பாதிக்கப்பட்டவர்களையும் நேரில் சந்தித்து பேசுமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
எண்ணூர் அருகே நெட்டுக்குப்பம் கழிமுகப் பகுதியில் படிந்துள்ள எண்ணெய் கழிவுகளால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளையும் மத்தியக் குழுவினர் ஆய்வு செய்தனர். சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் வியாழக்கிழமை வரை ஆய்வு மேற்கொள்ளும் மத்திய குழுவினர், அதன் பின் முதலமைச்சரை சந்தித்து ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளனர். அதனைத் தொடர்ந்து பாதிப்புகள், சேதாரம் குறித்து மத்திய அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்றும், 6 அமைச்சகத்திற்கு அந்த அறிக்கை அனுப்பப்பட்டு மேல் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.