தேனி மாவட்டம் கூடலூர் அருகே இளைஞரின் இறப்பில் சந்தேகம் இருப்பதாகக் கூறி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
குற்ற வழக்கு ஒன்றில் தேடப்பட்டு வந்த நபரை பிடிக்கும் பணியில் உள்ளூரில் வழிகாட்டுவதற்காக போலீசாருடன் சென்ற சாமுண்டிபுரத்தைச் சேர்ந்த பிரபு தேவா என்பவர் 2 நாட்களுக்கு முன் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தார்.
இதனால் சோகத்தில் இருந்ததாக கூறப்படும் கருநாக்கமுத்தன்பட்டியைச் சேர்ந்த இவரது நண்பர் பிரேம் குமார், தமது ஊரில் உள்ள தென்னந் தோப்பு ஒன்றில் நண்பர்களுடன் அமர்ந்து மது அருந்தியதாக தெரிகிறது.
இடையில் இவரது நண்பர்கள் சைடு டிஷ் வாங்குவதற்காக கடைக்கு சென்றிருந்ததாகவும், அவர்கள் திரும்பி வந்த பார்த்த போது, தோப்பில் தனியாக இருந்த பிரேம்குமார் மரம் ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
பிரேம் குமாரின் மரணத்தில் மர்மம் இருப்பதாகக் கூறி உறவினர்கள் பிரேதப் பரிசோதனை நடந்த கம்பம் அரசு மருத்துவமனை முன் சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார் விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் அவர்கள் கலைந்து சென்றனர்.