தெலங்கானா மாநில முதலமைச்சராக அனுமுலா ரேவந்த் ரெட்டி இன்று பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
ஹைதராபாத்தில் உள்ள லால் பகதூர் மைதானத்தில் நடைபெற்ற பதவியேற்பு நிகழ்ச்சியில், துணை முதல்வராக மல்லு பட்டி விக்ரமார்க்கா மற்றும் 10 அமைச்சர்களும் பதவி ஏற்றுக்கொண்டனர்.
பதவியேற்பு நிகழ்ச்சியில், காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜு கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா, கர்நாடக முதல்வர் சித்தராமையா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
119 இடங்களைக் கொண்ட தெலங்கானா சட்டப்பேரவைக்கு அண்மையில் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 65 இடங்களில் வெற்றிபெற்றது. இதையடுத்து, தெலங்கானா மாநிலம் உருவான பிறகு முதன்முறையாக அங்கு காங்கிரஸ் ஆட்சி அமைத்துள்ளது.
54 வயதான ரேவந்த் ரெட்டி, தெலங்கானா ராஷ்ட்ர சமிதி, தெலுங்கு தேசம் கட்சிகளில் பணியாற்றிவிட்டு 2017-ல் காங்கிரஸ் கட்சியில் இணைந்த அவர், கட்சியின் தெலங்கானா மாநில காங்கிரஸ் கட்சித் தலைவராக உள்ளார்.