இப்படி குறுக்கால போனா சீக்கிரமாக போயிராலாம்ன்னு.. காருடன் வெள்ளத்தில் சிக்கிய குடும்பம்..! ஆற்றுக்குள் இறங்கி மீட்ட போலீசார்
Published : Dec 01, 2023 7:09 PM
இப்படி குறுக்கால போனா சீக்கிரமாக போயிராலாம்ன்னு.. காருடன் வெள்ளத்தில் சிக்கிய குடும்பம்..! ஆற்றுக்குள் இறங்கி மீட்ட போலீசார்
Dec 01, 2023 7:09 PM
சென்னை புற நகர் பகுதியான கெருகம்பாக்கத்தில் இரவு நேரத்தில் தரைப்பாலத்தை மூழ்கடித்து வெள்ளம் பாய்வது தெரியாமல் மழை நீர் தேங்கி இருப்பதாக நினைத்து கடக்க முயன்ற கார் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டது.
மழை நீர் தேங்கி இருப்பதாக நினைத்து காருடன் அடையாறு வெள்ளத்தில் சிக்கிய என் ஜீனியர் முகமது ரபீக் இவர்தான்..!
செம்பரம்பாக்கத்தில் திறந்துவிடப்பட்ட உபரி நீர் அடையாற்றில் வெள்ளமாக கரைபுரண்டு ஓடுகின்றது. பூந்தமல்லி அடுத்த கெருகம்பாக்கத்தில் இருந்து தரப்பாக்கம் செல்லும் தரைப்பாலத்தை மூழ்கடித்து செல்லும் வெள்ளத்தால் தரை எது? கரை எது என்று? தெரியாமல் வெள்ளம் பாய்ந்து ஓடுகின்றது.
இரவு நேரம் என்பதாலும், மழை நேரத்தில் அந்த பாலத்தை அவர் இதற்கு முன்பு கடந்தது இல்லை என்பதாலும் வெள்ளம் செல்வது தெரியாமல் மழை நீர் தேங்கி இருப்பதாக நினைத்து காரை உள்ளே இறக்கி உள்ளார். அடுத்த சில வினாடிகளில் காரை வெள்ளம் அடித்துச்சென்றது.
சிறிது தூரம் இழுத்துச்செல்லப்பட்ட கார் முட்புதர் ஒன்றில் சிக்கி மிதந்துள்ளது. சுதாரித்துக் கொண்டமுகமது ரபீக், காரின் ஜன்னலை திறந்து தனது மனைவி மற்றும் மகளை காரின் மீது ஏற்றி அமர வைத்துவிட்டு உதவிக்கேட்டு கூச்சலிட்டுள்ளார்
இதனை பார்த்த இரு சக்கரவாகன ஓட்டி ஒருவர் போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளார். உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த மாங்காடு காவல் ஆய்வாளர் முத்துராமலிங்கம் தலைமையிலான போலீசார் வெள்ளத்தில் இறங்கிச்சென்று கயிறு கட்டி முகமது ரபீக் அவரது மனைவி மற்றும் மகளை பத்திரமாக மீட்டு கரைக்கு கொண்டுவந்தனர்
இது அடையாற்றின் நீர்வழிப்பாதை என்றெல்லாம் தெரியாது என்று தெரிவித்த ரபீக், தான் இதற்கு முன்பு ஒருமுறை இரு சக்கரவாகனத்தில் இந்த குறுக்கு பாதையில் குரோம்பேட்டைக்கு சென்றதாகவும் அதன்படி தற்போது செல்ல முயன்ற போது வெள்ளத்தில் காருடன் சிக்கிக் கொண்டதாக தெரிவித்தார். அவரது காரை மீட்கும் பணிகளில் தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.