சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் அவசர கால ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, மழை வடிகால் மற்றும் மீட்புப் பணிகள் குறித்து மேயர் பிரியா மற்றும் அதிகாரிகள் முதலமைச்சரிடம் விவரித்தனர்.
ஆய்வின் போது, அவசரகால கட்டுப்பாட்டு மையத்துக்கு வந்த சில அழைப்புகளுக்கு தாமே பதிலளித்தார் முதலமைச்சர், தொலைபேசியில் அழைத்தவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.
ஆய்வு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா. சுப்பிரமணியன், சென்னையில் கடந்த 2 ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட தூர்வாரும் பணிகளுக்கு தற்போது பலன் கிடைத்துள்ளதாகவும், கன மழையை எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளதாகவும் கூறினார்.
ஆய்வு பற்றி தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னையில் 162 மழை நிவாரண மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், தாழ்வான பகுதிகளில் மழை நீரை வெளியேற்ற 296 பம்ப்புகள் தயார் நிலையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாவட்டங்களுக்கு விரைந்து சென்று நிவாரண பணிகளை மேற்பார்வையிட முதலமைச்சர் அறிவுறுத்தி இருப்பதாக தெரிவித்துள்ள தமிழக அரசு, தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையில் 200 வீரர்கள் கொண்ட 8 குழுக்களும் தேசிய பேரிடர் மீட்புப் படையின் 225 வீரர்கள் கொண்ட 9 குழுக்களும் பல்வேறு மாவட்டங்களுக்கு விரைந்துள்ளதாகவும் கூறியுள்ளது.