தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வரும் 4-ஆம் தேதி வரை கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வானிலை மையத்தின் பாலச்சந்திரன், தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக் கூடும் என்று கூறியுள்ளார்.
சென்னைக்கு அருகே வங்கக் கடலில் உருவாகும் மேகக் கூட்டம் கிழக்கு திசை காற்றால் நிலப்பரப்பை நோக்கி நகர்ந்து வருவதாக குறிப்பிட்டுள்ள பாலச்சந்திரன், அடுத்த 24 மணி நேரத்தில் சென்னை மற்றும் புறநகரில் இடியுடன் கூடிய கன முதல் மிக கன மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார்.
வட தமிழக கடலோரப் பகுதிகளில் மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்திலும் காற்று வீசக்கூடும் என்பதால் டிசம்பர் 4-ஆம் தேதி வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.