காதும்மா.. காது போச்சும்மா.. நல்லா இருக்கு மேடம் உங்க பியூட்டி பயிற்சி..! ஒரு பெண்ணின் குமுறல்
Published : Nov 29, 2023 4:44 PM
காதும்மா.. காது போச்சும்மா.. நல்லா இருக்கு மேடம் உங்க பியூட்டி பயிற்சி..! ஒரு பெண்ணின் குமுறல்
Nov 29, 2023 4:44 PM
கம்மல் போட்ட காதை டேஞ்சராக்கியதாக அழகு கலை பயிற்சிக்கு சென்ற பெண் ஒருவர், அழகு கலை பயிற்சி நிபுணர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்
சென்னை சூளை பகுதியை சேர்ந்த சுஷ்மிதா, மேக்கப் ஆர்ட்டிஸ்டாகும் தணியாத ஆர்வத்தில் பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலையில் செயல்பட்டு வரும் மூன் பியூட்டி பார்லர் அகாடமி என்ற அழகு கலை பயிற்சி நிறுவனத்திற்கு சென்றார். பயிற்சி வகுப்புக்கு கட்டணமாக 2499 ரூபாய் செலுத்தி சுஷ்மிதா பயிற்சி வகுப்பில் சேர்ந்ததாக தெரிகிறது.
அப்போது, கம்மல் போட்ட காது துளைகளை அடைக்க என்ன செய்ய வேண்டும் என, அழகு கலை பயிற்சி அளிக்கும் நிபுணர் மைமூனா என்பவரிடம் சுஷ்மிதா ஆலோசனை பெற்றதாக கூறப்படுகிறது. அதற்கு earlobe repairing lotion என்ற கிரீமை உபயோகப்படுத்தினால் போதும், கம்மல் போட்ட துளை நாளடைவில் மறைந்து விடும் என மைமூனா அட்வைஸ் கூறியதாக தெரிகிறது.
மைமூனாவின் சிகிச்சை முறையை நம்பி, அவரது ஆலோசனை படி கிரீமை உபயோகித்து வந்த சுஷ்மிதாவுக்கு ஓரிரு நாட்களில் இரண்டு காதுகளிலும் காயங்கள் பெரிதாகி காது அழுகிய நிலைக்கு போனதாக கூறப்படுகிறது. இது பற்றி மைமூனாவிடம் கேட்டதற்கு, முறையான பதில் சொல்லவில்லை என்கின்றனர், சுஷ்மிதாவும் அவரது கணவரும்.
இதையடுத்து, முறையான மருத்துவரின் ஆலோசனை படி மருத்துவ சிகிச்சை மேற்கொண்டதால், கிரீம் போட்டு அழுகிய காதுப் பகுதி சரியானதாக கூறினார் சுஷ்மிதா.
நியாயம் கேட்டு மூன் பியூட்டி அகடாமி அழகு கலை பயிற்சி அளித்த மைமூனாவிடம் கேட்க சென்ற தங்களை மிரட்டியதாக கூறிய சுஷ்மிதாவின் கணவர், இது குறித்து திரு வி க நகர் காவல் நிலையத்திலும் சென்னை காவல் ஆணையரக அலுவலகத்திலும் புகார் அளித்திருப்பதாக தெரிவித்தார்.
இதுகுறித்து அழகு கலை பயிற்சி நிறுவன மைமுனாவிடம் கேட்ட போது, சிகிச்சைக்காக அளிக்கப்பட்ட கிரீமை உபயோகிக்கும் போது, 5 நாட்கள் வரை காதில் தண்ணீர் படக்கூடாது என தான் கூறியதாகவும், இதை பொருட்படுத்தாமல் சுஷ்மிதா காதில் தண்ணீர் பட்டதால் தான், கம்மல் போட்ட இடம் அழுகி போனதாகவும் பதில் அளித்தார். திரு வி க நகர் காவல் நிலைய ஆய்வாளரிடம் கேட்ட போது, சிகிச்சைக்காக அளிக்கப்பட்ட மருத்துவம் குறித்து, தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலிடம் விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பபட்டு இருப்பதாக தெரிவித்தனர்.
விபரீத சிகிச்சையால் நடிகை ரைசாவின் முகம் பாதிக்கப்பட்டது போனது போல் எவ்வளவோ உதாரணங்கள் இருந்தாலும், இதுபோன்று முறையற்றவர்களின் ஆலோசனையின் பேரில் மருத்துவ சிகிச்சை மேற்கொண்டால் என்ன மாதிரியான விபரீதம் நடக்கும் என்பதற்கு சுஷ்மிதாவே சாட்சி...!