​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
17 நாள் நெடுந்தவத்துக்கு கை மேல் கிடைத்த பலன்..! 41 சுரங்கத் தொழிலாளர்கள் மீட்கப்பட்ட பரபரப்பான நிமிடங்கள்..!

Published : Nov 29, 2023 6:27 AM



17 நாள் நெடுந்தவத்துக்கு கை மேல் கிடைத்த பலன்..! 41 சுரங்கத் தொழிலாளர்கள் மீட்கப்பட்ட பரபரப்பான நிமிடங்கள்..!

Nov 29, 2023 6:27 AM

உத்தர்காசியில் 17 நாட்கள் சுரங்க இடிபாடுகளுக்கு நடுவே சிக்கித் தவித்த 41 தொழிலாளர்களும் வெற்றிகரமாக மீட்கப்பட்டுள்ளனர். 400 மணி நேர போராட்டத்துக்குப் பின் தொழிலாளர்கள் மீட்கப்பட்ட விதம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.

யமுனை ஆற்றின் பிறப்பிடமான யமுனோத்ரிக்கு பனி, மழை போன்ற எந்த காலத்திலும் செல்லும் வகையில் ஆயிரத்து 300 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டு வருகிறது சுரங்கம் ஒன்று. குறுக்கே உள்ள மலையை குடைந்து அமைக்கப்படும் இந்த சுரங்கத்தின் ஒரு பகுதி கடந்த தீபாவளியன்று காலை திடீரென நொறுங்கி விழுந்தது.

ஒரு பக்கம் மலைக்கும் மறு பக்கம் கான்கிரீட் இடிபாடுகளுக்கும் நடுவே கட்டுமானத் தொழிலாளர்கள் 41 பேர் சிக்கி இருந்தனர். 60 மீட்டர் அளவுக்கு கான்கிரீட் இடிபாடுகள் விழுந்திருந்ததால் அவற்றை உடனடியாக அகற்றி உள்ளே சிக்கியவர்களை மீட்க இயலவில்லை.

முதல்கட்டமாக, 60 மீட்டர் தூரத்துக்கு சிறிய பைப்பை புகுத்தி, சிக்கியுள்ளவர்கள் மூச்சு விட பிராண வாயுவும், சாப்பிட உணவுப் பொருட்களையும் மீட்புப் படையினர் அனுப்பினர்.

அடுத்தகட்டமாக, 90 சென்ட்டி மீட்டர் விட்டமுள்ள குழாய்களை இடிபாட்டு குவியல்களுக்கு நடுவே புகுத்தி அதன் மூலம் தொழிலாளர்களை ஊர்ந்து வெளியே வரச் செய்யும் முயற்சியில் இறங்கினர்.

உள்ளே இருந்த கான்கிரீட் குவியல்கள் மற்றும் தடிமனான இரும்புத் தகடுகளால் மீட்புப் பணியில் சிக்கல் நிலவி வந்தது. இதனால் 17 நாட்களாக 41 தொழிலாளர்களும் உள்ளேயே சிக்கி இருக்கும் நிலை நீடித்து வந்தது.

அமெரிக்காவில் இருந்து வந்த துரப்பண எந்திரம் உட்பட பல்வேறு நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி மீட்புப் பணியை மேற்கொள்ள நடந்த முயற்சிகள் பலன்தரவில்லை.

இதையடுத்து, மெட்ராஸ் சாப்பர்ஸ் ராணுவ பொறியாளர்கள் குழு மற்றும் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் இணைந்து எலி வளை நுட்பத்தை பயன்படுத்தி தொழிலாளர்களை மீட்க முடிவு செய்தனர்.

இதன்படி, ஏற்கனவே பொருத்தப்பட்டிருந்த குழாய்களுக்குள் டிரில்லிங் எந்திரம், சுத்தியல், மண்வெட்டி, அரம், ஆக்ஸிஜன் கருவி போன்றவற்றை எடுத்துக் கொண்டு மீட்புக் குழுவினர் ஊர்ந்து சென்றனர். குறுகலான பாதைகளில் ஊர்ந்து சென்று பல மணி நேரம் அங்கேயே இருந்தபடி துளையிடுவதில் நிபுணத்துவம் பெற்ற அவர்கள் இடிபாடுகளை படிப்படியாக அகற்றினர்.

இடிபாடுகள் அகற்றப்பட்ட அதே வேளையில் மீட்புக் குழாய் சிறிது சிறிதாக உள்ளே செலுத்தப்பட்டது. செவ்வாய் இரவு 8 மணி வரை இந்தப் பணி நீடித்தது. இறுதியில் முன்னா குரேஷி என்ற எலி வளை நிபுணர் கடைசி பாறையை அகற்றி உள்ளே சிக்கி இருந்தவர்களை கண்டதும் 400 மணி நேர காத்திருப்புக்கு பலன் கிடைத்தது.

தொழிலாளர்கள் சிக்கி இருந்த இடத்துக்கு வெற்றிகரமாக சென்றடைந்த மீட்புக் குழுவினர், அங்கிருந்து ஒவ்வொரு தொழிலாளராக குழாய் வழியாக வெளியே அனுப்பினர். சுமார் அரை மணி நேர இடைவேளையில் 41 தொழிலாளர்களும் பத்திரமாக வெளியே அழைத்து வரப்பட்டனர்.

தொழிலாளர்கள் அனைவரும் நல்ல உடல் நலத்துடன் இருந்ததால், தங்கள் சொந்தக் காலில் நடந்தே வெளியே வந்தனர். யாரையும் ஸ்ட்ரெட்சர் மூலம் தூக்கி வரும் நிலை ஏற்படவில்லை. அவர்களை வெளியே காத்திருந்த உத்தரண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி, மத்திய அமைச்சர் வி.கே. சிங் உள்ளிட்டோர் மாலைகளை அணிவித்து, இனிப்புகளை வழங்கியும் உற்சாகமாக வரவேற்றனர்.

உத்தரகண்ட் முதலமைச்சரை செல்பேசியில் தொடர்பு கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, தொழிலாளர்கள் பற்றி கேட்டறிந்துவிட்டு, அவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இதையடுத்து, சம்பவ இடத்திலேயே முதலுதவி வழங்கப்பட்ட பின்னர், தொழிலாளர்கள் 41 பேரும் தயாராக இருந்த ஆம்புலன்சுகள் மூலம் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

மீட்கப்பட்ட தொழிலாளர்களின் குடும்பத்தினர் பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகளை பரிமாறியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். தொழிலாளர்களை கட்டியணைத்து நெகிழ்ச்சியுடன் அவர்கள் வரவேற்றனர். தொழிலாளர்கள் மீட்கப்பட்ட தினம் தான் தங்களுக்கு உண்மையான தீபாவளி என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

17 நாட்கள் சிக்கி இருந்த தொழிலாளர்கள் வெற்றிகரமாக மீட்கப்பட்டது குறித்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட பலரும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்