​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
முதியோர் உதவித் தொகை வரவில்லை.. ஆட்சியர் காலில் விழுந்து கதறிய பெண்மணி..!

Published : Nov 28, 2023 6:52 AM



முதியோர் உதவித் தொகை வரவில்லை.. ஆட்சியர் காலில் விழுந்து கதறிய பெண்மணி..!

Nov 28, 2023 6:52 AM

மயிலாடுதுறையில் நிறுத்தப்பட்ட முதியோர் உதவித் தொகையை மீண்டும் வழங்க கோரி வயது முதிர்ந்த பெண்மணி ஒருவர் மாவட்ட ஆட்சியர் காலில் விழுந்து கோரிக்கை மனு அளித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தலைமையில் நேற்று நடைபெற்றது. அப்பொழுது மாவட்ட ஆட்சியர் அலுவலக வெளிவளாகத்தில் 80 வயதான முதியவர் ஒருவரை ஊன்றுகோலுடன் நடக்க முடியாத நிலைமையில் கைத்தாங்கலாக அவரது மனைவி ஒரு கையில் பிடித்து மெல்ல அழைத்து வந்தார்.

ஒரு கையில் கணவர், மறுகையில் மனுவுடன்அந்த தம்பதியர் நடக்க முடியாமல் நடந்து வந்த காட்சி காண்போரின் மனதை நெகிழச் செய்தது. இதனை கண்ட செய்தியாளர்கள் அவர்களை கைத்தாங்கலாக மனு கொடுக்கும் இடத்திற்கு அழைத்து சென்றனர். அப்போது வெளியே வந்த மாவட்ட ஆட்சியரை கண்ட மூதாட்டி அவரது காலில் விழுந்து முதியோர் உதவித் தொகை வரவில்லை என்று கண்ணீர் மல்க தெரிவித்தார்.

விசாரணையில் அவர்கள் திருச்சிற்றம்பலம் பகுதியைச் சேர்ந்த சின்னையன் மற்றும் கனியம்மாள் என்பதும் கடந்த சில மாதங்களாக கணவருக்கு முதியோர் உதவித் தொகை வராமல் நிறுத்தி வைக்கப்பட்டதும் தெரிய வந்தது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கனியம்மாள், 2 மகன்களில் ஒருவர் உயிரிழந்து விட, தாங்கள் இருவர் மட்டும் தனியாக முதியோர் உதவித் தொகையை மட்டும் வைத்து வாழ்ந்து வருவதாக தெரிவித்தார்.

இதனை அடுத்து தனி வட்டாட்சியரை அழைத்த மாவட்ட ஆட்சியர் உடனடியாக அவர்களை அலையவிடாமல் முதியோர் உதவித் தொகை வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.