சென்னை வளசரவாக்கத்தில் கிரீன் லைஃப் பவுண்டேஷன் போதை மறுவாழ்வு மையத்திற்கு சிகிச்சைக்கு வந்த இளைஞரை அடித்துக் கொலை செய்த வழக்கில் உரிமையாளர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
மது போதைக்கு அடிமையாகி இருந்ததாக கூறப்படும் சென்னை ஆதம்பாக்கம் அம்பேத்கர் நகரைச் சேர்ந்த விஜய் என்ற 27 வயது இளைஞரை அவரது சகோதரர் ராஜேஷ் கடந்த செப்டம்பர் 12-ஆம் தேதி போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சைக்காக அனுமதித்ததாக தெரிகிறது.
கடந்த சனிக்கிழமை ராஜேஷை தொடர்பு கொண்ட மறுவாழ்வு மைய நிர்வாகிகள், விஜய்க்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்து விட்டதாக தெரிவித்ததாகவும், நேரில் சென்று பார்த்த போது விஜயின் கை, கால்களில் காயம் மற்றும் ரத்தக்கட்டு இருந்ததாகவும் வளசரவாக்கம் காவல் நிலையயத்தில் ராஜேஷ் புகார் அளித்தார்.
விசாரணையில், விஜய்க்கு 24-ஆம் தேதியே உடல் நிலை பாதிக்கப்பட்டதாகவும், அப்போது அவர் நடிப்பதாகக் கூறி மறுவாழ்வு மையத்தினர் உரிய சிகிச்சை அளிக்காமல் காலம் தாழ்த்தியதால் இறந்ததாக போலீசார் தெரிவித்தனர். இது பற்றி யாருக்கும் தெரியக்கூடாது என்பதற்காக மறுவாழ்வு மையத்தின் சி.சி.டி.வி. காட்சிகளை அவர்கள் அழித்ததாகவும் போலீசார் கூறினர்.