தெலங்கானாவில் அமலில் உள்ள முஸ்லிம்களுக்கான 4 சதவீத இட ஒதுக்கீடு ரத்து செய்யப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.
தெலங்கானா சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் அவர், ஹைதராபாத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். நாட்டிலேயே தெலங்கானா மாநிலத்தில் தான், அரசியல் அமைப்புச் சட்டத்துக்கு எதிராக மத அடிப்படையிலான இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது என்றும் பாஜக ஆட்சிக்கு வந்தால், அந்த இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டு பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியலின மக்களுக்கு வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
சந்திரசேகர ராவ் தலைமையிலான அரசு, முறைகேடுகளிலும் ஊழல் செய்வதிலும் முன்னணியில் உள்ளது என்றும் மக்களுக்கு உருப்படியான எந்தத் திட்டத்தையும் செயல்படுத்தவில்லை என்றும் தெரிவித்தார்.
சந்திரசேகர ராவ் அரசு மீது இளைஞர்கள், விவசாயிகள், பிற்படுத்தப்பட்டோர் என அனைத்துத் தரப்பினரும் ஏமாற்றத்துடன் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.