உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட தேஜாஸ் ரக போர் விமானத்தில் பிரதமர் மோடி பயணம் மேற்கொண்டார். கர்நாடகாவின் பெங்களூரு சென்ற பிரதமர், மத்திய அரசின் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனத்தை பார்வையிட்டார்.
மேலும், ஹெச்.ஏ.எல்.-இன் தயாரிப்பு பணிகள் மற்றும் தயாரிப்பு வசதிகள் குறித்தும் அதிகாரிகளிடம் அவர் கேட்டறிந்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து அங்கு அதிநவீன இலகு ரக தேஜஸ் ரக போர் விமானத்தில் விமானியுடன் இணைந்து பயணம் மேற்கொண்டார்.
இதன் மூலம் தேஜாஸ் விமானத்தில் பயணித்த முதல் பிரதமர் என்ற பெருமையை மோடி பெற்றுள்ளார்.
இதுகுறித்து தெரிவித்த பிரதமர், தேஜாஸ் விமானத்தின் பயண அனுபவம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகவும், பெருமையாகவும் இருந்ததாக கூறியுள்ளார்.
மேலும், நாட்டின் திறன்கள் மீதான தமது நம்பிக்கை மேலும் உயர்ந்துள்ளதாகவும், தற்சார்பு நிலையை அடைவதில் உலக நாடுகளுக்கு இந்தியா சளைத்தது அல்ல என்றும் பிரதமர் சமூகவலைதளத்தில் தெரிவித்துள்ளார்.