உத்தரகாண்ட் மாநிலம் உத்தர்காசியில் சுரங்கப்பாதை விபத்தில் சிக்கியுள்ள 41 பேரையும் மீட்க பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் மீண்டும் பழுதடைந்ததால், மனிதர்களைக் கொண்டு மீதமுள்ள சுமார் 10 மீட்டர் தூரத்துக்கு பாறை இடிபாடுகளை அகற்றும் பணி தொடங்கப்பட உள்ளது.
சமீபத்தில் பாறை இடிபாடுகளுக்கு இடையே அமைக்கப்பட்ட 6 அங்குல குழாய் வழியே கேமரா செலுத்தி, பணியாளர்கள் பாதுகாப்பாக இருப்பது உறுதி செய்யப்பட்டது.
அத்துடன், அவர்களுக்குத் தேவையான உணவு உள்ளிட்ட அனைத்து அத்தியாவசியப் பொருள்களும் அந்தக் குழாய் வழியே அனுப்பப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், பாறை இடுபாடுகள் இடையே 80 சென்டிமீட்டர் அகலம் உள்ள குழாய்களை அமெரிக்கன் ஆகர் என்ற நவீன இயந்திரம் மூலம் செலுத்தி அதன் வழியே பணியாளர்களை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
ஆனால், கடைசியாக சுமார் 10 மீட்டர் இருக்கும் நிலையில், இரும்புக் கம்பிகள் குறுக்கிட்டதால் இயந்திரம் பழுதுபட்டது. இதையடுத்து, அந்த இயந்திரத்தை வெளியே எடுத்துவிட்டு, குழாய் வழியே மனிதர்களை அனுப்பி பாறை இடுபாடுகளை அகற்றி வழி ஏற்படுத்தவுள்ளதாக மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.