ஆவினின் பச்சை நிற பாக்கெட் விற்பனையை நிறுத்துவதற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
4 புள்ளி 5 சதவீதம் கொழுப்புச் சத்து கலக்கப்பட்ட, 40 சதவீத பங்குள்ள பச்சை நிற பாக்கெட் பால் விற்பனையை நிறுத்திவிட்டு, 3 புள்ளி 5 சதவீதம் கொழுப்பு சத்துள்ள ஊதா நிற பாக்கெட் பால் விற்பனை செய்ய முடிவு செய்திருப்பது கண்டிக்கத்தக்கது என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
6% கொழுப்புச் சத்து இருக்க வேண்டிய ஆரஞ்சு நிற பாக்கெட் பாலில், 4.79% கொழுப்புச் சத்தே இருப்பது, உணவுப் பாதுகாப்பு மற்றும் தரப்படுத்தல் ஆணையம் அங்கீகரித்த பரிசோதனைக் கூடத்தின் ஆய்வறிக்கை மூலம் தெரியவந்துள்ளதாக அண்ணாமலை, அந்த ஆய்வு அறிக்கையை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.
இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், அரசியல் சுயலாபத்திற்காக அண்ணாமலை சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகள், தமிழக விவசாயிகளுக்கு எதிரான செயல் என்று கூறியுள்ளார்.
ஆரஞ்சு நிற பாக்கெட் பாலில் கொழுப்பு சத்து குறைவாக இருப்பதாகக் கூறியுள்ளது அப்பட்டமான பொய் என்றும், ஆய்வுக்கு கொடுக்கப்பட்ட மாதிரியில் சந்தேகம் எழுந்துள்ளது என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.