வயது மூப்பு மற்றும் உடல்நலப் பாதிப்புகளுக்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அமெரிக்க முன்னாள் அதிபர் ஜிம்மி கார்ட்டரின் மனைவி ரோஸலின் கார்ட்டர் காலமானார்.
96 வயதான அவரது மறைவுக்குப் பல அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். தனது திருமண வாழ்க்கையில் அனைத்திலும் ரோஸலின் சமபங்கு கொண்டிருந்ததாகவும், முக்கியமான கட்டங்களில் தனக்கு நல்ல வழிகாட்டுதலையும் ஊக்கத்தையும் கொடுத்ததாகவும் கணவர் ஜிம்மி கார்ட்டர் தெரிவித்துள்ளார்.
1977 முதல் 1981-ஆம் ஆண்டு வரை அமெரிக்க அதிபராக ஜிம்மி கார்ட்டர் இருந்தபோது அவரது அரசியல் வாழ்வில் ரோஸலின் மிகப்பெரிய அளவில் பங்காற்றியதுடன், அமைச்சரவைக் கூட்டங்களில் பங்கெடுத்துக்கொள்ளும் அளவுக்கு அதிகாரமிக்கவராகவும் திகழ்ந்தார். கார்ட்டர் மையம் என்ற அமைப்பைத் தொடங்கி உலக அமைதி மற்றும் மனநலம் தொடர்பான செயல்பாடுகளில் அவர் ஈடுபட்டிருந்தார்.