தமிழக அரசு உச்சநீதிமன்றத்தை அணுகும் வரை 3 ஆண்டுகளாக ஆளுநர் என்ன செய்து கொண்டிருந்தார் என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநருக்கு கால வரம்பு நிர்ணயிக்கக் கோரி தமிழக அரசு தொடுத்த வழக்கு தலைமை நீதிபதி சந்திரசூட் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, எப்போதோ அனுப்பிய மசோதாக்களை கிடப்பில் போட்டு விட்டு தற்போது ஆளுநர் திருப்பி அனுப்பி இருப்பதாக தெரிவித்த தமிழக அரசு வழக்கறிஞர்கள், ஒவ்வொரு முறையும் ஆளுநருக்கு எதிராக உச்சநீதிமன்றத்துக்கு வந்து கொண்டிருக்க முடியாது என்றும் கூறினர்.
உடனே மத்திய அரசின் அட்டர்னி ஜெனரலை நோக்கி, கடந்த 10-ஆம் தேதி தாங்கள் உத்தரவு பிறப்பித்த பின் 13-ஆம் தேதி மசோதாக்களை ஆளுநர் திருப்பி அனுப்பி இருப்பதை சுட்டிக்காட்டிய தலைமை நீதிபதி, 2020 ஜனவரியில் இருந்து மனுக்கள் நிலுவையிலுள்ள நிலையில், 3 ஆண்டுகளாக ஆளுநர் என்ன செய்து கொண்டிருந்தார் என்று கேள்வி எழுப்பினார். உச்சநீதிமன்றத்தை அரசு அணுகும் வரை ஆளுநர் காத்திருக்க வேண்டிய அவசியம் என்ன என்றும் வினவினர்.
அதற்கு, பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களை நியமிப்பது தொடர்பாக மசோதாக்கள் மட்டுமே ஆளுநர் நிலுவையில் வைத்திருந்ததாக தெரிவித்த அட்டர்னி ஜெனரல், ஆளுநரின் அதிகாரத்தை பறிக்கும் மசோதா என்பதால் தான் அதை பரிசீலிக்க வேண்டி இருந்ததாக விளக்கமளித்தார்.
ஆளுநரிடம் 2020 முதல் 2023 வரை மசோதாக்கள் இருந்ததாக குறிப்பிட்ட உச்சநீதிமன்றம், இந்தத் தரவுகளை பார்க்கும் போது அவர் மசோதாக்களை நிலுவையில் வைத்திருந்ததாக கூறுவதற்கு முகாந்திரம் இருக்கிறதே என்றது. அதற்கு, 2021 நவம்பரில் தான் ஆளுநர் ஆர்.என். ரவி பொறுப்பு ஏற்றதாக அட்டர்னி பதிலளித்தார். பிரச்சினை குறிப்பிட்ட ஒரு ஆளுநரின் நடவடிக்கை தொடர்பானது அல்ல என்றும் பொதுவாக ஆளுநர் பதவி தொடர்பானது என உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
அப்போது, ஆளுநர் திருப்பி அனுப்பிய 10 மசோதாக்கள் தமிழக சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றப்பட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 2-வது முறையாக மசோதாவை நிறைவேற்றி அனுப்பினால், அதனை குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்க முடியுமா என்று உச்சநீதிமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. அவ்வாறு செய்ய சட்டப்படி வாய்ப்பில்லை என்று தமிழக அரசு தரப்பில் பதிலளிக்கப்பட்டது. ஆளுநரின் அடுத்தகட்ட நடவடிக்கைக்கு அவகாசம் வழங்கும் வகையில் வழக்கை உச்சநீதிமன்றம் வரும் 1-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.