​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
படியில் சாகசப் பயணம் செய்து கால்களை பறிகொடுத்த மாணவன்..! சில நொடி சந்தோஷத்துக்காக சீர்குலைந்த எதிர்காலம்..!!

Published : Nov 18, 2023 7:52 AM



படியில் சாகசப் பயணம் செய்து கால்களை பறிகொடுத்த மாணவன்..! சில நொடி சந்தோஷத்துக்காக சீர்குலைந்த எதிர்காலம்..!!

Nov 18, 2023 7:52 AM

சென்னையை அடுத்த குன்றத்தூரில் அரசு பேருந்தின் படிக்கட்டில் தொங்கியபடி பயணித்த போது தவறி கீழே விழுந்த 15 வயது பள்ளி மாணவனின் இரு கால்களும் அதே பேருந்தின் பின் சக்கரம் ஏறி துண்டாயின. மாணவனின் உயிரை காப்பாற்றுவதற்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அவனது கால்களை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து அகற்றியுள்ளனர்.

சென்னையை அடுத்த குன்றத்தூரைச் சேர்ந்தவர், சந்தோஷ். கட்டிடங்களுக்கான செண்ட்ரிங் வேலை செய்து வரும் விஸ்வநாதனின் மகனான சந்தோஷ், வீட்டில் இருந்து அரை கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள சேக்கிழார் அரசு ஆடவர் மேனிலைப் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவன்.

வெள்ளியன்று பருவத் தேர்வை முடித்துக் கொண்டு வீட்டுக்கு புறப்பட்ட சந்தோஷ், கோயம்பேட்டில் இருந்து குன்றத்தூர் செல்லும் 16-கே அரசுப் பேருந்தில் நண்பர்களுடன் ஏறியுள்ளான்.

நடந்து சென்றால் 10 நிமிடங்கள் கூட ஆகாத தூரத்தை கடப்பதற்காக சந்தோஷ் ஏறிய பேருந்தில் கூட்டம் நிரம்பி வழிந்ததாக கூறப்படுகிறது. இதனால் சந்தோஷும் அவரது நண்பர்களும் படிக்கட்டிலேயே தொங்கிக் கொண்டு சென்றதாக தெரிகிறது.

பேருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில், குன்றத்தூர் தேரடிப் பகுதியில் சென்று கொண்டிருந்த போது, கைகள் வழுக்கி பிடிமானம் தளர்ந்து சந்தோஷ் கீழே விழுந்துள்ளான். அப்போது பேருந்தின் பின் புற சக்கரங்கள் சந்தோஷின் இரு கால்கள் மீதும் ஏறி இறங்கியது.

கால்கள் இரண்டும் துண்டாகி ரத்த வெள்ளத்தில் சந்தோஷ் கிடந்ததைப் பார்த்ததும், அவருடன் பேருந்தில் பயணித்த சக மாணவர்கள், கீழே இறங்கி தலைத்தெறிக்க ஓட்டம் பிடித்தனர்.

வலியில் துடித்துக் கொண்டிருந்த சந்தோஷை அங்கிருந்த மக்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சந்தோஷை பரிசோதித்த மருத்துவர்கள், துண்டான அவரது கால்களை அகற்றாவிட்டால், உயிருக்கே ஆபத்து ஏற்படும் என்று கூறி அறுவைசிகிச்சை மூலம் கால்களை அப்புறப்படுத்தினர்.

சந்தோஷின் கால்கள் அகற்றப்பட்ட தகவலை அறிந்து அவரது பெற்றோரும் பாட்டியும் கதறி அழுதனர்.

இதே மார்க்கத்தில் சில நாட்களுக்கு முன்பு அரசு பேருந்தில் தொங்கியபடி பயணித்த மாணவர்களை அடித்து இறக்கிவிட்ட நடிகை ரஞ்சனா நாச்சியார், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சந்தோஷின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறினார்.

படியில் பயணம், நொடியில் மரணம் என்ற விழிப்புணர்வு வாசகங்களை பேருந்தில் எழுதிப் போடுவது மட்டுமின்றி, பயணிகளை பின்பற்றச் செய்தால் இது போன்ற அசம்பாவிதங்களைத் தவிர்க்கலாம் என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்து.