தனது கட்டுப்பாட்டில் உள்ள 430 பொறியியல் கல்லூரிகளுக்கான தேர்வு மற்றும் சான்றிதழ் கட்டணம் உயர்த்தப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
இதன்படி, இளநிலை படிப்புகளுக்கான தேர்வு கட்டணம் தாள் ஒன்றுக்கு 150 ரூபாயிலிருந்து 250 ரூபாயாகவும், புராஜெக்ட் ஒர்க்ஸ் எனப்படும் திட்டப் பணிகள் குறித்த இளநிலை தாளுக்கு 300 ரூபாயிலிருந்து 450 ரூபாயும் உயர்த்தப்பட்டுள்ளது.
முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கு ஒரு பாடப்பிரிவுக்கான தேர்வு கட்டணம் 450 ரூபாயிலிருந்து 650 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
பருவத் தேர்வுக்கான மதிப்பெண் பட்டியல் கட்டணமும் ஆயிரம் ரூபாயிலிருந்து 1500 ரூபாயாகவும், பட்டம் பெற்றதற்கான சான்றிதழ் பெற கட்டணம் ஆயிரம் ரூபாய் இருந்து 1500 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளதாகவும் அண்ணா பல்கலைக்கழகம் கூறியுள்ளது.
இந்த கட்டண உயர்வு நடப்பு பருவத்தில் அமலுக்கு வராது என்று விழுப்புரத்தில் பேட்டியளித்த உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.