என்ன ராவுத்தரே நியாயமா ? கெட்டுப்போன பிரியாணி விற்பனை 10 கிலோ அழுகிய சிக்கன் பறிமுதல்..! கடையை இழுத்துப்பூட்டிய அதிகாரிகள்
Published : Nov 14, 2023 6:11 PM
என்ன ராவுத்தரே நியாயமா ? கெட்டுப்போன பிரியாணி விற்பனை 10 கிலோ அழுகிய சிக்கன் பறிமுதல்..! கடையை இழுத்துப்பூட்டிய அதிகாரிகள்
Nov 14, 2023 6:11 PM
விழுப்புரத்தில் கெட்டுபோன சிக்கன் பிரியாணியை சுடவைத்து விற்ற புகாருக்குள்ளான ராவுத்தர் பிரியாணி கடையில் சோதனை நடத்திய உணவுபொருள் பாதுகாப்புத்துறையினர் 10 கிலோ கெட்டுபோன சிக்கனை பறிமுதல் செய்ததுடன் கடையையும் இழுத்துப்பூட்டி சீல் வைத்தனர்
விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகில் இயங்கி வரும் திண்டுக்கல் ராவுத்தர் பிரியாணி கடையில் மட்டன் பிரியாணி வாங்கிச்சென்று சாப்பிட்டு விட்டு வாந்தி எடுத்ததாக ஆவேசமாக பெண் புகார் தெரிவித்திருந்தார்.
7 முறை வாந்தி எடுத்ததாக புகார் தெரிவித்த பெண்ணிடம் போலீசார் , காவல் நிலையம் வந்து புகார் அளித்தால் நடவடிக்கை எடுப்பதாக கூறினர். இது தொடர்பான செய்தி வெளியான நிலையில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ராவுத்தர் பிரியாணி கடையில் சோதனை மேற்கொண்டனர்.
சோதனையில் தரமற்ற கெட்டுப்போன 10 கிலோ கோழிக்கறி இருந்ததை அறிந்து பறிமுதல் செய்தனர். அது மட்டும் இல்லாமல் நேற்று சமைக்கப்பட்ட பிரைட் ரைஸ் மற்றும் குழம்பு வகைகளும் ப்ரிட்ஜ்ஜில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது.
அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாமல் கழிவறைக்கு அருகிலே சமையலறை இருப்பதை கண்டு அதிர்ந்து போன அதிகாரிகள் ஐந்தாயிரம் அபராதம் விதித்ததுடன் நீங்க கடை நடத்தியது போதும் என்று ராவுத்தர் பியாணி கடையை தற்காலிகமாக மூடி சீல் வைத்தனர்.