இமாச்சலப் பிரதேசத்தின் லெப்சா பகுதியில் இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்புப்படை வீரர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி தீபாவளியை கொண்டாடினார்.
வீரர்களுடன் தேசபக்தி பாடல்களை பாடி, இனிப்புகளை ஊட்டிவிட்டு, அவர்களுடன் பிரதமர் குழு புகைப்படமும் எடுத்துக்கொண்டார்.
ராணுவ சீருடையில், வீரர்கள் மத்தியில் உரையாற்றிய பிரதமர், நமது பாதுகாப்புப் படைகளின் தைரியம் அசைக்க முடியாதது என்று தெரிவித்தார்.
தன்னலம் பார்க்காமல் எல்லையை காக்கும் வீரர்களுக்கு ஒட்டு மொத்த நாடும் கடன்பட்டுள்ளதாகவும், அனைத்து சூழலிலும் நாட்டின் 140 கோடி மக்களும், வீரர்களுக்கு துணை நிற்பார்கள் என்றும் கூறினார்.
கடந்த 35 ஆண்டுகளில், ராணுவ வீரர்கள் இல்லாமல் ஒரு தீபாவளி பண்டிகையை கூட தான் கொண்டாடியது கிடையாது என்றும், பிரதமராகவோ, முதலமைச்சராகவோ இல்லாதபோதும் தீபாவளியன்று நாட்டின் ஏதோ ஒரு எல்லையிலேயே தீபாவளியை கொண்டாடியதாகவும் பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டார்.