ஆளுநருக்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த மனுக்கள் மீது ஆளுநரின் செயலர் மற்றும் மத்திய உள்துறை அமைச்சகம் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பிய மசோதாக்களையும் கைதிகளை விடுவிக்கும் அரசின் பரிந்துரை மீதும் முடிவெடுக்காமல் ஆளுநர் நிலுவையில் வைத்திருப்பதாகக் கூறி தமிழக அரசு தாக்கல் செய்த மனுக்கள் தலைமை நீதிபதி சந்திரசூட் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
தமிழக அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், அரசின் செயல்பாடுகளை முடக்கும் வகையில் ஆளுநரின் நடவடிக்கை உள்ளதாக வாதிட்டனர். அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, ஆளுநரிடம் நிலுவையில் உள்ள மசோதாக்கள் எப்போது நிறைவேற்றப்பட்டவை, எவ்வளவு நாளாக கிடப்பில் உள்ளன என்று வினவினார்.
தமிழக ஆளுநரிடம் மசோதாக்கள் நிலுவையில் இருப்பது கவலைக்குரிய விஷயம் என தெரிவித்த தலைமை நீதிபதி, அடுத்த விசாரணையின் போது அட்டர்னி ஜெனரல், சாலிசிட்டர் ஜெனரல் நேரில் ஆஜராகி வழக்கு தொடர்பாக உதவுமாறு அறிவுறுத்தினார். பின்னர் வழக்கை வரும் 24-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.