​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கொலை வழக்கில் ஜெயிலுக்கு போவாராம்.. சாமி வரம் கொடுக்கலைன்னு பெட்ரோல் பாம் வீசுவாராம்..!

Published : Nov 10, 2023 8:49 PM



கொலை வழக்கில் ஜெயிலுக்கு போவாராம்.. சாமி வரம் கொடுக்கலைன்னு பெட்ரோல் பாம் வீசுவாராம்..!

Nov 10, 2023 8:49 PM

சென்னை கொத்தவால் சாவடியில் உள்ள வீரபத்ரன் சாமி கோவிலின் கருவறைக்குள் உள்ள சாமி சிலை மீது பெட்ரோல் குண்டு வீசியதாக கொலை வழக்கில் சிக்கி ஜெயிலுக்கு சென்று வந்த போதை ஆசாமியை போலீசார் கைது செய்துள்ளனர்

சென்னை கொத்தவால்சாவடி கோவிந்தப்ப நாயக்கன் தெருவில் வீரபத்திரன் சாமி தேவஸ்தானம் எனும் கோயில் அமைந்துள்ளது. உயர் நீதிமன்ற வளாகத்தில் நீதித்துறையின் கீழ் செயல்படும் ( Administrator General and Official Trustee ) ட்ரஸ்டின் கீழ் இந்த கோயில் உள்ளது.

வெள்ளிக்கிழமை காலை வீரபத்திரன் சாமி கோயிலுக்கு வந்த நபர் ஒருவர் கையில் பீர் பாட்டிலுடன் உள்ளே நுழைந்ததை பார்த்த கோயில் அர்ச்சகர் உமாச்சந்திரன். அவரை தடுக்க முயன்ற போது மிரட்டி விட்டு கையில் வைத்திருந்த லைட்டரை கொண்டு பெட்ரோல் நிரப்பிய பாட்டிலில் பற்ற வைத்து கருவறைக்குள் இருந்த சாமி சிலையின் மீது தூக்கி வீசி உள்ளார்.

அது பயங்கர சத்தத்துடன் வெடித்து சாமி சிலையின் மீது போடப்பட்டிருந்த வெட்டிவேர் மாலை கருகி உள்ளது. உடனடியாக அர்ச்சகர் தண்ணீரை ஊற்றி அணைத்ததாக கூறப்படுகிறது. பெட்ரோல் குண்டு வீசிய நபர் ,'உன்னை நம்பிய எனக்கு என்ன செய்தாய்' வரம் தரவில்லையே என சாமி சிலையை பார்த்து கோபமாக பேசிக் கொண்டே வீசியதாக அர்ச்சகர் தெரிவித்தார்.

உடனடியாக அங்கு போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் இருந்த காவலர் ஒருவரும் அவ்வழியாக காய்கறி வாங்க வந்த கொத்தவால்சாவடி தலைமை காவலர் ராமலிங்கம் என்பவரும் ஓடி வந்து பொதுமக்கள் உதவியுடன் அந்த நபரை பிடித்தனர். விசாரணையில் கொத்தவால்சாவடி ஆதியப்ப நாயக்கன் தெருவை சேர்ந்த 39 வயதான முரளி கிருஷ்ணன் என்பது தெரியவந்தது. இந்த நபர் கோயிலுக்கு எதிரில் உள்ள ஜிகே டிரேடர்ஸ் என்ற பெயரில் உலர் பழங்கள் மொத்த வியாபாரம் செய்யும் கடையை நடத்தி போண்டியானதும், கொலை வழக்கு உள்ளிட்ட 5 வழக்குகளில் தொடர்புடையவர் என்பதும் தெரியவந்தது.

இதனிடையே கோயிலில் பெட்ரோல் குண்டு வீசுவதற்கு முன்பு ஒரு டீக்கடைக்குள் அமர்ந்து மது பாட்டிலில் பெட்ரோலை நிரப்பிய போது அங்கிருந்தவர்கள் தட்டிக் கேட்டதும் அவர்களுடன் வாக்குவாதம் செய்யும் சிசிடிவி காட்சிகளும் கோயிலை நோக்கி பெட்ரோல் குண்டுடன் முரளி கிருஷ்ணன் செல்லும் சிசிடிவி காட்சிகளும் வெளியானது.

முரளிகிருஷ்ணன் அதிகமான மதுபோதையின் காரணமாக தெளிவற்ற மனநிலையில் இருந்ததால் இச்செயலில் ஈடுபட்டதாகவும், அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக பெரு நகர சென்னை காவல்துறையினர் அறிவித்துள்ளனர்