இந்தியா மற்றும் வங்கதேசத்துக்கான 3 புதிய திட்டங்களை பிரதமர் மோடியும், வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவும் இணைந்து காணொலி வாயிலாக தொடங்கி வைத்தனர்.
அதன்படி, இந்தியாவின் அகர்தலா - வங்கதேசத்தின் அகௌரா இடையேயான எல்லை தாண்டிய ரயில் சேவை, வங்கதேசத்தின் குல்னா - மோங்லா துறைமுக ரயில் பாதை, மைத்ரி சூப்பர் அனல்மின் நிலையத்தின் 2ஆம் அலகு ஆகியவை தொடங்கி வைக்கப்பட்டன.
இதில் அகர்தலா - அகௌரா இடையிலான ரயில்பாதை, வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா, அசாம், மிசோரம் வழியாக மேற்குவங்கம் செல்கிறது.
இதன்மூலம் திரிபுரா தலைநகர் அகர்தாலா மற்றும் மேற்குவங்க தலைநகர் கொல்கத்தா இடையிலான போக்குவரத்து நேரம் 31 மணி நேரத்திலிருந்து 10 மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, அண்டை நாடான வங்கதேசத்தின் வளர்ச்சியில் இந்தியா மிகப்பெரிய பங்களிப்பை அளித்து வருவதாக பெருமிதம் தெரிவித்தார்.
கடந்த 9 ஆண்டுகளில் வங்கதேசத்திற்கு 10 பில்லியன் அமெரிக்க டாலருக்கு இந்தியா உதவி வழங்கியுள்ளதாக குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, இரு நாடுகள் இடையே நட்புறவை வலுப்படுத்தும் பிரதமரின் மோடியின் அர்ப்பணிப்புக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக கூறினார்.