சர்தார் வல்லபாய் படேலின் 148-வது பிறந்தநாள், நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. குஜராத்தின் கெவாடியாவில் நர்மதை நதிக்கரை ஓரம் அமைந்துள்ள படேலின் தேசிய ஒற்றுமை சிலைக்கு பிரதமர் நரேந்திர மோடி மலரஞ்சலி செலுத்தினார்.
அப்போது, வானில் பறந்த ஹெலிகாப்டர்கள் மூலமும் சிலை மீது மலர்கள் தூவப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.
ஏக்நாத் நகரில் நடைபெற்ற தேசிய ஒற்றுமை தின நிகழ்ச்சியில், எல்லை பாதுகாப்புப்படை, மத்திய பாதுகாப்புப்படை மற்றும் காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை பிரதமர் நரேந்திர மோடி ஏற்றார்.
தொடர்ந்து நடைபெற்ற மத்திய ரிசர்வ் போலீஸ் படையை சேர்ந்த பெண் காவலர்களின் பைக் சாகசம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. பெண் காவலர்களின் துணிச்சலான ஸ்டண்ட்களை பார்த்து ரசித்த பிரதமர், கை தட்டி உற்சாகப்படுத்தினார்.
சந்திரயான்-3 விண்கலத்தின் வெற்றியை கொண்டாடும் வகையிலும் விழாவில் கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.
இந்த நிகழ்ச்சியில், தேசத்தின் ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் பாதுகாப்புக்காக நம்மை அர்ப்பணித்துக்கொள்வோம் என பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மக்கள் உறுதி மொழியும் ஏற்றனர்.