ஏழு நாளில் ரூ.461 கோடி லியோ வசூல் உண்மையா ? ஐ.டி ரைடு வராமல் இருந்தா சரிதான்..! திருப்பூர் சுப்பிரமணியன் சொல்லும் கணக்கு
Published : Oct 27, 2023 7:01 AM
ஏழு நாளில் ரூ.461 கோடி லியோ வசூல் உண்மையா ? ஐ.டி ரைடு வராமல் இருந்தா சரிதான்..! திருப்பூர் சுப்பிரமணியன் சொல்லும் கணக்கு
Oct 27, 2023 7:01 AM
லியோ திரைப்படம் 7 நாட்களில் 461 கோடி ரூபாய் வசூலை தாண்டியதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ள நிலையில் லியோ படத்தால் தங்களுக்கு லாபம் இல்லை என்று திரையரங்கு உரிமையாளர் சங்கதலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
விஜய்யின் நடிப்பில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றுள்ள லியோ திரைப்படத்தை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
உலகம் முழுவதும் 4 ஆயிரத்துக்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியான லியோ திரைப்படம் முதல் நாளே உலகமெங்கும் 148 கோடிகளை தாண்டி வசூலித்து விட்டதாக தயாரிப்பாளர் லலித்குமார் அறிவித்தார். தசரா விடுமுறை தினத்துடன் வெளியான 4 நாட்களில் 400 கோடியை தாண்டிவிட்டது எனவும், 7 நாட்களில் 461 கோடிகளை தாண்டியதாகவும் படத்தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டது. பல வெளி நாடுகளில் லியோ படம் வெளியிடப்பட்டாலும் யு.கே பாக்ஸ் ஆபீஸ் கலெக்சன் மட்டுமே கடந்த 6 நாட்களாக தொடர்ந்து அறிவிக்கப்பட்டு வருகின்றது. அதன்படி அயர்லாந்துடன் சேர்ந்த யு.கே பாக்ஸ் ஆபீசில் லியோ படம் இதுவரை 11 கோடியே 40 லட்சம் ரூபாயை வசூலித்திருப்பதாக அறிவித்துள்ளனர்.
தயாரிப்பாளர் லலித்தின் பேராசையால் அதிக திரையரங்குகளை கொண்ட வட இந்திய மாநிலங்களில் பெரும்பாலான மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் லியோ திரையிடப்படவில்லை என்றும் தமிழகத்தில் மட்டுமே அதிகபட்சமாக 1000க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் லியோ வெளியானது என்றும் திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் தெரிவித்தார். கேரளாவில் லியோவுக்கு வரவேற்பு கிடைத்தாலும், ஆந்திரா, தெலுங்கானா, மற்றும் கர்நாடகாவிலும் போதிய வரவேற்பை பெறாத லியோ திரைப்படம் 461 கோடி ரூபாய் வசூல் என்று கூறப்படுவதன் பின்னணி குறித்தும் அவர் விளக்கினார்.
ஜெயிலர் படத்தின் வசூலை லியோ முறியடிக்க வேண்டும் என்பது தான் லியோ பட தயாரிப்பாளரான லலித்தின் டார்க்கெட் என்றும் விஜய்யின் குட் புக்கில் இடம் பெற வேண்டும் என்பதற்காக 461 கோடி வசூல் என கூறுவதாகவும், அவரிடம் சென்று யாராவது கணக்கா கேட்க போகிறார்கள் ? என்றும் திருப்பூர் சுப்பிரமணியம் கேள்வி எழுப்பினார். வசூலில் 75 சதவீதம் முதல் 80 சதவீதம் வரை தனக்கு வேண்டும் என்று அழுத்தம் கொடுத்து தங்கள் தலையில் கட்டப்பட்ட லியோ படத்தால் திரையரங்கு உரிமையாளர்களுக்கு எந்த ஒரு லாபமும் இல்லை என்றார்.
வேறு படம் ஏதும் இல்லாததால், திரையரங்கு உரிமையாளர்கள் இந்த படத்தை வெளியிடும் நிலைக்கு தள்ளப்பட்டதாகவும், போட்டிக்கு படம் வந்திருந்தால் லியோ படத்தை திரையரங்கு உரிமையாளர்கள் புறக்கணித்திருப்பார்கள் என்றும் திருப்பூர் சுப்பிரமணியம் தெரிவித்தார்.
வசூலில் பங்கு தொகை குறைந்து போன ஆத்திரத்தில் திருப்பூர் சுப்பிரமணியம் இப்படி கூறுகிறார் என்று கூறப்பட்ட நிலையில், புக்மை சோ தளத்தில் சென்று பார்த்தால், விடுமுறை காரணமாக 6 நாட்களாக ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடிய லியோவுக்கு, வார நாட்களில் பெரும்பாலான திரையரங்குகளில் காட்சிகள் முழுமையாக முன்பதிவாகவில்லை. 60 முதல் 70 சதவீத பார்வையாளர்கள் மட்டுமே பார்ப்பதாக திரை விமர்சகர்கள் தெரிவித்தனர். திருப்பூர் ஸ்ரீசக்தி சினிமாஸில் இன்று காலை காட்சிக்கு 10 பேருக்கு மேல் வந்தால் தான் லியோ படம் திரையிடப்படும் என்று கூறப்பட்டதால், படம் பார்க்க வந்த 5 பேரும் வாசலில் வழிமேல் விழிவைத்து காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.