​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ரவுடி கருக்கா வினோத்தை ஜாமீனில் எடுத்தது யார் ? நடுக்கத்தில் சிறை அதிகாரிகள்..! பா.ஜ.க வழக்கறிஞர் ஜாமீனில் எடுத்தாரா ?

Published : Oct 27, 2023 6:52 AM



ரவுடி கருக்கா வினோத்தை ஜாமீனில் எடுத்தது யார் ? நடுக்கத்தில் சிறை அதிகாரிகள்..! பா.ஜ.க வழக்கறிஞர் ஜாமீனில் எடுத்தாரா ?

Oct 27, 2023 6:52 AM

ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு நடத்திய ரவுடி கருக்கா வினோத்தை அவரது குடும்ப உறுப்பினர்கள் ஜாமீனில் எடுக்காத நிலையில், மற்றொரு வழக்கில் விடுதலையான பி.எப்.ஐ அமைப்பினருடன், ஜெயிலில் இருந்து வினோத் வெளியே வந்த வீடியோ வெளியான நிலையில் அவரை ஜாமீனில் எடுத்தது பாரதீய ஜனதா வழக்கறிஞர் என்று தகவல் வெளியாகி உள்ளது..

சென்னை ஆளுனர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசியதாக தேனாம்பேட்டையை சேர்ந்த கருக்கா வினோத் என்ற ரவுடியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

கடந்த ஆண்டு இதே போல பாரதீய ஜனதா கட்சியின் தலைமை அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த தனது மகன் வினோத்தை ஒரு நாள் கூட ஜெயிலுக்கு சென்று பார்க்கவில்லை என்றும் ஜாமீன் எடுக்கவில்லை என்றும் அவனது தாய் தெரிவித்தார்

அவனாகவே ஜாமீன் பெற்று வந்ததாக தெரிவித்த வினோத்தின் தாய், ஏன் என்னை வந்து பார்க்கவில்லை என்று தன்னிடம் சண்டையிட்டதாகவும் தெரிவித்தார். சனிக்கிழமை ஜாமீனில் வெளியே வந்ததாக கூறப்பட்ட நிலையில், அதே தினம் புழல் ஜெயிலில் இருந்து மற்றொரு வழக்கில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் ஜாமீன் பெற்றது தெரியவந்தது. அப்போது எடுக்கப்பட்ட வீடியோவில் அந்த அமைப்பினர் வெளியே வரும் போது அவர்களுக்கு பின்னால் கருக்கா வினோத் சிறையில் இருந்து வெளியே வந்த காட்சிகள் இடம் பெற்றன.

இந்நிலையில் ஆளுனர் மாளிகை மீதான பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் தொடர்பாக என்.ஐ.ஏ அதிகாரிகள் தீவிர விசாரணையை முன்னெடுத்துள்ளதாக கூறப்படுகின்றது. உற்றார் உறவினர்கள் ஜாமீன் எடுக்காமல் சம்பந்தமே இல்லாத 70 வயதுடைய ஆணும் பெண்ணும் கையெழுத்து போட்டு அதற்குரிய பணத்தை கட்டி கருக்கா வினோத்தை ஜாமீனில் வெளியே அழைத்து வந்தது தெரியவந்துள்ளது. யார் சொல்லி, எதற்காக ஜாமீன் எடுத்தார்கள் என்று விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது. சிறையில் இருந்து ரிலீசான பி.எப்.ஐ நிர்வாகிகளுடன் ரவுடி கருக்கா வினோத் சென்றது எதேச்சையானது என்று சிறைத்துறை அதிகாரிகள் கூறினர்.

இதற்கிடையே ரவுடி கருக்கா வினோத்தை ஜாமீனில் எடுத்தது பாரதிய ஜனதாவின் திருவாரூர் மாவட்ட பா.ஜ.க வழக்கறிஞர் பிரிவு செயலாளர் முத்தமிழ் செல்வக்குமார் என்று திமுக ஐ.டி விங் எக்ஸ் தளத்தில் தகவல் வெளியிட்டது.

இதையடுத்து தான் பாரதீய ஜனதாவில் இல்லை என்று மறுத்துள்ள வழக்கறிஞர் முத்தமிழ் செல்வக்குமார், தன்னை கேட்காமல் நண்பர்கள் கட்சியில் சேர்த்ததாகவும், தான் கேட்டுக் கொண்டதை அடுத்து விடுவித்து விட்டதாகவும் தெரிவித்தார், சிறைக்கு கைதிகளை பார்க்க சென்ற தனது ஜூனியர் வழக்கறிஞர்கள் இருவர் தான் கருக்கா வினோத்தை ஜாமீன் எடுத்ததாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

இதற்கிடையே தாங்கள் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யாமல், முழுமையாக விசாரிக்காமல் ரவுடி கருக்கா வினோத்தின் பின்னணியை விசாரிக்காமல் அவசர கோலத்தில் சிறையில் அடைத்து வழக்கையே கொன்று விட்டதாக கூறி ராஜ்பவன் செய்திக்குறிப்பு வெளியிடப்பட்டது. இதற்கு பதில் அளித்துள்ள தமிழக டிஜிபி சங்கர் ஜிவால், இந்த வழக்கு முழுமையாகவும், விரிவாகவும் விசாரிக்கப்படும் என்றும் ஆளுனர் மாளிகை செய்திக்குறிப்பில் சொல்லி இருப்பது போன்று பெட்ரோல் குண்டு வெடிக்கவில்லை என்றும், முன்பு ஆளுனரின் வாகனத்தின் மீது கட்டை மற்றும் கற்களால் தாக்குதல் நடந்ததாக கூறுவதும் உண்மைக்கு புறமானது என்று தெரிவித்துள்ளார்.

மறுபக்கம் கருக்கா வினோத்தை தங்கள் காவலில் எடுத்து விசாரிக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.