ரூ.1 கோடி கட்டிட ஒப்பந்தம் திமுக பிரமுகரின் மகன் கொலை மாமூல் கும்பல் அட்டூழியம்..!
Published : Oct 26, 2023 9:53 PM
ரூ.1 கோடி கட்டிட ஒப்பந்தம் திமுக பிரமுகரின் மகன் கொலை மாமூல் கும்பல் அட்டூழியம்..!
Oct 26, 2023 9:53 PM
சென்னை திருவொற்றியூரில் திமுக பிரமுகரின் மகனான, மாநகராட்சி ஒப்பந்ததாரரை மர்மகும்பல் வெட்டி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 1 கோடி ரூபாய் மதிப்பில் நூலக கட்டிடப்பணிக்கு ஒப்பந்தம் எடுத்தவரிடம் மாமூல் கேட்டு மர்மகும்பல் நடத்திய கொலை வெறி தாக்குதல் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு
மாமூல் ரவுடிகளால் கொடூரமாக கொல்லப்பட்ட மாநகராட்சி ஒப்பந்ததாரரான காமராஜின் சடலத்தை கண்டு உறவினர்கள் கதறி அழும் காட்சிகள் தான் இவை..!
சென்னை திருவொற்றியூர் அடுத்த எர்ணாவூர் விம்கோ நகர் பகுதி திமுகவின் ஐந்தாவது வார்டு வட்ட பிரதிநிதியாக உள்ளவர் விவேகானந்தன் . இவரது மகன் காமராஜ், அரசு ஒப்பந்ததாரராக உள்ளார். எர்ணாவூர் பூம்புகார் நகர் பகுதியில் ஆர்வி என்டர்பிரைசஸ் நிறுவனத்தை நடத்தி வரும் காமராஜ் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட எண்ணூர் பகுதியில் திருவொற்றியூர் சட்ட மன்ற உறுப்பினர் நிதியிலிருந்து 1 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நூலகம் கட்டுவதற்கான பணியை 2 மாதங்களுக்கு முன்பு ஒப்பந்தம் எடுத்திருந்தார்
இந்த நிலையில் வியாழக்கிழமை காலை அலுவலகத்தில் இருந்த காமராஜை கதவை தட்டி வெளியில் அழைத்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல், அவரை தலையிலும் கையிலும் சராமரியாக அரிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓடிவிட்டனர்
சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர், ரத்த வெள்ளத்தில் துடித்துக் கொண்டு இருந்த காமராஜை மீட்டு அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி காமராஜ் உயிரிழந்தார். சம்பவம் குறித்து எண்ணூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மகனின் இழப்பை தாங்க இயலாமல் விவேகானந்தன் மற்றும் குடும்பத்தினர் கதறி அழுதனர்
தகவல் அறிந்து செங்குன்றம் துணை ஆணையர் பாலகிருஷ்ணன், உதவி ஆணையர் பிரமானந்தம் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். சிசிடிவி கேமிரா காட்சிகளை கைப்பற்றிய போலீசார் தடயங்களை சேகரித்ததோடு, 2 தனிப்படைகள் அமைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஒரு கோடி ரூபாய் நூலகக் கட்டிடம் குறித்து அறிந்த மர்ம கும்பல் ஒன்று அண்மையில் காமராஜிடம் லட்சக்கணக்கில் கமிஷன் பணம் கேட்டு மிரட்டியதாகவும், காமராஜ் பணம் கொடுக்க மறுத்ததாகவும் கூறப்படுகின்றது. இதனால் இந்த கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். எண்ணூர் பகுதியில் மாமூல் ரவுடிகளின் அட்டூழியத்தால் அரசு ஒப்பந்ததாரர் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.