வாராய்... நீ... வாராய்.... 1000 அடி உயர மலையில் மனைவி கதையை முடித்த கணவர்..! திறமையாக துப்பறிந்த போலீசார்
Published : Oct 26, 2023 7:11 AM
வாராய்... நீ... வாராய்.... 1000 அடி உயர மலையில் மனைவி கதையை முடித்த கணவர்..! திறமையாக துப்பறிந்த போலீசார்
Oct 26, 2023 7:11 AM
அடிக்கடி சண்டை போட்டுவிட்டு தாய் வீட்டுக்குச் சென்ற மனைவியை, 1000 அடி உயர மலைக்கோவிலுக்கு சாமி கும்பிட அழைத்துச்சென்று, கொலை செய்து வீசிய கணவனை 6 மாதம் கழித்து போலீசார் கைது செய்துள்ளனர். தாலியால் துப்புத் துலங்கிய பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு..
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த வெண்குன்றம் கிராமத்தில் 1,440 அடி உயரம் கொண்ட ஸ்ரீ தவளகிரி மலைக்கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு செல்லும் படிக்கட்டு அருகே ஆயிரம் அடி உயரத்தில் ஆறு மாதங்களுக்கு முன்பு அடையாளம் தெரியாத நிலையில் 34 வயது பெண் ஒருவர் சடலமாக கிடந்தார். அவரது கழுத்தில் தாலி உள்ளிட்ட தங்க ஆபரணங்கள் அப்படியே கிடந்தன. அவரை யாரோ கழுத்தை நெரித்துக் கொலை செய்து வீசிச்சென்றிருப்பது தெரியவந்தது.
சம்பவம் தொடர்பாக விசாரணையை முன்னெடுத்த வந்தவாசி தெற்கு காவல் நிலைய போலீசார், அந்த பெண் சடலமாக கிடக்கும் புகைப்படத்தை போஸ்டராக அச்சடித்து ஒட்டினர். தமிழகம் முழுவதும் உள்ள காவல் நிலையங்களுக்கும் அனுப்பி வைத்தனர். அந்தப் பெண் அணிந்திருந்த தாலியை வைத்து எந்த பகுதி மக்கள் அணியும் மாடல் என்பதையும் விசாரித்தனர். இந்த நிலையில், சீர்காழியை சேர்ந்த ஜெயராமன் என்பவர் தனது மனைவி நித்தியா என்கிற நித்தியகல்யாணியை கடந்த ஆகஸ்ட் மாதம் 18 ந்தேதி முதல் காணவில்லை என்று கடந்த மாதம் 13 ஆம் தேதி அன்று சீர்காழி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
நித்தியாவின் புகைப்படத்தை வைத்து விசாரணையை முன்னெடுத்த சீர்காழி போலீசார் நித்தியாவின் புகைப்படத்தில் உள்ள தாலியும், வந்தவாசி அருகே மலையில் சடலமாக கிடந்த பெண்ணின் கழுத்தில் கிடந்த தாலியும் ஒரே மாதிரி இருப்பதாக வந்தவாசி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து வந்தவாசி போலீசார் இரு புகைப்படங்களுடன் அந்த பெண்ணின் பெற்றோரை சந்தித்து விசாரித்த போது மலையில் சடலமாக கிடந்தது தங்கள் மகள் தான் என்று கூறி கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.
இதையடுத்து நித்தியா சடலமாக கிடந்த ஏப்ரல் 19 ந்தேதி வெண்குன்றம் பகுதியில் உள்ள செல்போன் டவர்களில் பதிவான எண்களை ஆய்வு செய்தபோது, நித்தியாவின் கணவர் ஜெயராமன் ஒன்றரை மணி நேரம் வெண்குன்றம் மலையில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து ஜெயராமனை அழைத்து சிறப்பு கவனிப்புடன் விசாரித்த போது, நித்தியா கொலைக்கான மர்மம் விலகியது. ஜெயராமனுக்கும் நித்தியாவுக்கும் 11 வயதில் மகன் இருக்கும் நிலையில் மளிகைக்கடை நடத்திவரும் கணவனுடன் சண்டை போட்டு விட்டு வந்தவாசியில் உள்ள தாய் வீட்டுக்கு செல்வதை நித்தியா வாடிக்கையாக வைத்திருந்ததாக கூறப்படுகின்றது. இதனால் நிம்மதி இழந்த ஜெயராமன் வியாபாரத்தை கவனிக்க இயலாமலும், குடும்பத்தை நடத்த இயலாமலும் மன உளைச்சளில் தவித்துள்ளார்.
இந்த நிலையில் மீண்டும் சண்டையிட்டு கோபித்துக் கொண்டு தாய்வீடு சென்ற நித்யா, தன்னை அழைத்துச்செல்லுமாறு கணவனை அழைத்துள்ளார். சம்பவத்தன்று வந்தவாசிக்கு சென்றதும் கணவன் ஜெயராமனை அழைத்துக் கொண்டு குடும்ப பிரச்சனையை தீர்த்து வைக்கும் சக்திவாய்ந்த கோயில் என்று வெண்குன்றம் தவளகிரி மலைகோயிலுக்கு அழைத்துச்சென்றுள்ளார் நித்தியா. அங்கு இருவரும் மலைக்கோவிலில் சாமி கும்பிட்டு விட்டு திரும்பும் வழியில் 1000 அடி உயரத்தில் படிக்கட்டில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த போது இருவருக்குமிடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரம் அடைந்த ஜெயராமன், மனைவியை முகத்தில் கடுமையாக தாக்கி கழுத்தை நெரித்துக்கொலை செய்து வீசிவிட்டு தப்பிச்சென்றது தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
இதையடுத்து ஜெயராமனை கைது செய்த வந்தவாசி காவல் ஆய்வாளர் விஸ்வநாதன் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார். கடந்த 6 மாதங்களாக இந்த வழக்கில் போலீசார் தொழில் நுட்ப ரீதியாகவும், கைப்பற்றப்பட்ட தடயங்கள் மூலம் சிறப்பாக துப்பு துலக்கி கொலையாளியை கண்டுபிடித்திருப்பதாக தெரிவித்தனர்.