இங்கிருந்து எழுந்து போ.. பெண் பயணிகள் மீது தண்ணீர் ஊற்றிய கடைக்காரர்..! பதிலடி கொடுத்த மாநகராட்சி ஆணையர்
Published : Oct 20, 2023 9:23 PM
இங்கிருந்து எழுந்து போ.. பெண் பயணிகள் மீது தண்ணீர் ஊற்றிய கடைக்காரர்..! பதிலடி கொடுத்த மாநகராட்சி ஆணையர்
Oct 20, 2023 9:23 PM
திருப்பூர் மத்திய பேருந்து நிலையத்தில் ஆவின் பாலகம் பெயரில் டீக்கடை நடத்தி வரும் நபர் , பேருந்துக்காக காத்திருந்த பெண் பயணிகள் மீது தண்ணீரை பிடித்து ஊற்றி விரட்டியதால் வாக்குவாதம் ஏற்பட்டது. பேருந்து நிலையம் பயணிகளுக்காகவா ? அல்லது ஆக்கிரமித்து கடை நடத்துவோருக்காகவா ?என்று கேள்வி எழுப்பப்பட்ட நிலையில் மாநகராட்சி அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.
திருப்பூர் மத்திய பேருந்து நிலையத்தில் கடை என் 42 ல் ஆவின்பாலகம் என்ற பெயரி டீக்கடை நடத்திவரும்
நபர், பெண் பயணிகளை அங்கிருந்து போகச்சொல்லி ஆபாசமாக பேசி விரட்டும் காட்சிகள் தான் இவை..!
திருப்பூர் மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள ஆவின் பாலகம் என்கிற டீக்கடை முன்பு உள்ள பிளாட்பாரத்தில் பெண் பயணி ஒருவர் தனது குடும்பத்துடன் பேருந்துக்காக காத்திருந்தார். அந்த பெண் அமர்ந்து இருப்பதால் தங்கள் வியாபாரம் கெடுவதாக கூறி அந்த பெண்கள் அமர்ந்திருந்த பிளாட்பாரத்தில் தண்ணீரை ஊற்றினார் டீக்கடை உரிமையாளர் விரட்டினார்
இதை தட்டிக்கேட்ட பெண்ணை ஆபாசமாக பேசியதோடு , 10 லட்சம் ரூபாய் கொடுத்து கடை வைத்திருப்பதாக தோரணையாக கூறியதோடு, முடிந்தல் போலீஸ்காரனை கூப்பிடு என்றும் சவால் விட்டார்
நடைபாதையை ஆக்கிரமித்து கடை வைத்திருந்த பூக்கடை பெண்மணியும், டீக்கடைகாரருக்கு ஆதரவாக பெண் பயணியை ஆபாசமாக பேசி விரட்டினார்
பேருந்து நிலையம் பயணிகளுக்காகவா ? அல்லது ஆக்கிரமித்து கடை நடத்துவோருக்காகவா ?என்று, திருப்பூர் மாநகராட்சி ஆணையர் பவன்குமாரிடம் கேள்வி எழுப்பிய நமது செய்தியாளர் , பிளாட்பாரத்தை ஆக்கிரமித்து கடை வைத்து பயணிகளை மிரட்டுவோர் மீது என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.
இதையடுத்து மத்திய பேருந்து நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்ட மாநகராட்சி ஆணையர் பவன்குமார் பிளாட்பாரத்தை ஆக்கிரமித்து கடை வைத்துக் கொண்டு பயணிகள் மீது தண்ணீர் ஊற்றி அடாவடி செய்த ஆவின் பலகம் கடையை இழுத்து பூட்டியதோடு, பயணிகளுக்கு இடையூறு செய்ததாக அந்த கடையின் உரிமத்தையும் ரத்து செய்து உத்தரவிட்டார்
பேருந்து நிலையத்தில் ஆக்கிரமித்து வைக்கப்பட்ட கடைகள் அனைத்தும் உடனடியாக அகற்றப்பட்டது.
பயணிகள் வசதிக்காக அமைக்கப்பட்ட பேருந்து நிலையத்தில் கடைகள் ஒதுக்கீடு பெற்றுக் கொண்டு பயணிகளையே விரட்டுவது என்பது ஏற்றுக் கொள்ள முடியாதது என்ற பயணிகள் உடனடி நடவடிக்கை மேற்கொண்ட மாநகராட்சி நிர்வாகத்துக்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர். பிரச்சனைக்குரிய ஆவின் கடையை மாநகராட்சி கவுன்சிலரின் கணவர் ஆனந்த் என்பவர் நடத்தி வருவதாக கூறப்படுகின்றது.
இதனிடையே பெண் மீது தண்ணீர் ஊற்றி, தகாத சொற்களால் பேசியதாக தேநீர் கடையின் டீ மாஸ்டர் அனில்குமார், ஊழியர் வெங்கடேஷ் ஆகிய இருவர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.