வீட்டிலுள்ள பொருட்களை வைத்து ராக்கெட் செய்யும் ஹமாஸ்..! எப்படி செய்கிறார்கள் தெரியுமா..?
Published : Oct 20, 2023 6:44 AM
வீட்டிலுள்ள பொருட்களை வைத்து ராக்கெட் செய்யும் ஹமாஸ்..! எப்படி செய்கிறார்கள் தெரியுமா..?
Oct 20, 2023 6:44 AM
காஸாவில் மோதல் துவங்கி 14 நாட்கள் ஆகின்றன. இஸ்ரேல் போன்ற ராணுவ பலம் மிக்க நாட்டுக்கு எதிராக ஹமாஸ் போராளிகள் தாக்குப் பிடிக்க அவர்களின் ராக்கெட்டுகள் பெரும் உதவிகரமாக இருப்பதாக கூறுகின்றனர், ராணுவ வல்லுநர்கள். ஹமாஸ் போராளிகள் ராக்கெட்டுகளை எப்படி உருவாக்குகிறார்கள் என்பதை விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.
காஸாவில் நடந்து வரும் போரின் துவக்கப் புள்ளியாக அமைந்தது, அக்டோபர் 7-ஆம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய 5000 ராக்கெட்டுகள் வீச்சு!
இஸ்ரேலின் மொசாட் உளவு அமைப்பின் கழுகுப் பார்வையை மீறி வெளிநாடுகளில் இருந்து ராக்கெட்டுகளை காஸாவுக்குள் கொண்டு வர சாத்தியமில்லை என்கின்றனர், நிபுணர்கள். எனவே காஸாவுக்குள்ளேயே கசாம் ராக்கெட்டுகளை ஹமாஸ் போராளிகள் உருவாக்கி இருக்கலாம் என்பது நிபுணர்களின் கருத்து. ஆனால், எப்படி..?
ஹமாஸ் ராக்கெட்டுகளில் பயன்படுத்தப்படும் மூலப் பொருட்களில் முதன்மையானது, வீடுகளில் சாதாரணமாக பயன்படுத்தப்படும் சர்க்கரை. அடுத்தது, விவசாய இடு பொருட்களை விற்கும் கடையில் உரமாக கிடைக்கும் பொட்டாஷியம் நைட்ரேட். இரண்டையும் குறிப்பிட்ட விகிதத்தில் கலந்து ராக்கெட் உந்து எரிபொருள் தயாரிக்கப்பட்டதாக கூறுகின்றனர் நிபுணர்கள்.
ராக்கெட்டுக்கும் சர்க்கரைக்கும் என்ன சம்மந்தம்..? தீவைத்து எரிக்கப்படும் போது சர்க்கரையில் இருக்கும் ஆற்றல் வெளிப்படும். அதில் உரத்தை சேர்த்தால், ஆக்ஸிஜன் வாயு கலந்து ஆற்றல் விரைவாக வெளிப்பட்டு, ராக்கெட் வேகமாக வானில் பறந்து செல்ல உதவும் என்கின்றனர் நிபுணர்கள்.
அடுத்து, எல்லா ஹார்டுவேர் கடைகளிலும் கிடைக்கக் கூடிய தண்ணீர் குழாய் பைப்புகளைக் கொண்டு ராக்கெட்டின் உடற்பகுதியை உருவாக்கி இருக்கிறார்கள், ஹமாஸ் போராளிகள்.
அதற்குள் யூரியா நைட்ரேட்டையும் டி.என்.டி. வெடி பொருளையும் கலந்து திணித்துள்ள போராளிகள், வெடிக்கும் போது சுற்றியுள்ள பலர் பலியாக வேண்டும் என்ற நோக்கத்துடன் ஆணிகளையும் பால் பேரிங்குகளையும் கலந்திருப்பார்கள் என்று கூறப்படுகிறது.
இலகுவாக மடக்கக் கூடிய ஏவுதளத்தில் விரும்பிய கோணத்தில் வைத்து ஏவப்படும் கசாம் ராக்கெட்டுகளில் வழிகாட்டு மின்னணுக் கருவிகள் இல்லை. அதனால் தீபாவளி ராக்கெட்டுகளைப் போல அவை எங்கே சென்று விழும் என்பது யாருக்கும் தெரியாது.
எனினும், இந்திய மதிப்பில் 25 முதல் 50 ஆயிரம் ரூபாய் மட்டுமே செலவாகும் என்பதால் கசாம் ராக்கெட்டுகளை ஆயிரக்கணக்கில் தயார் செய்து ஏவி வருகின்றனர், ஹமாஸ் போராளிகள்.
மறுபுறம், இந்த ராக்கெட்டுகளில் இருந்து தற்காத்துக் கொள்ள இஸ்ரேல் பல நூறு கோடிகளை செலவிட வேண்டி இருக்கிறது. இஸ்ரேல் வசம் உள்ள அயர்ன் டோம் ராக்கெட் தடுப்பு அமைப்பில் பயன்படுத்தும் ஏவுகணை ஒவ்வொன்றின் விலையும் 40 லட்ச ரூபாய்க்கு மேல் என்கின்றனர், ராணுவ தளவாட நிபுணர்கள்.