தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்தின் தலைமையின் மீது மூன்று லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் கடன் இருப்பதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையத்தில் நடைபயண பிரச்சாரத்தில் பேசிய அவர், தமிழகத்தில் ஒரு குழந்தை பிறக்கும்போதே கடனாளியாக பிறக்கின்றது என்றும் ஆனால் குஜராத்தில் ஒரு குழந்தை பிறக்கும்போதே 17 ஆயிரம் ரூபாய் லாபத்தில் பிறக்கின்றது என்றும் கூறினார்.
அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள் உள்ளார்களோ இல்லையோ என்பது தெரியாது என்று கூறிய அண்ணாமலை, ஆனால் மதுக்கடையில் சேல்ஸ்மேன் கண்டிப்பாக இருப்பார் என்றார். திமுக ஆட்சி வந்த பிறகு பால் உள்ளிட்ட மக்களின் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகமாக உயர்ந்து விட்டது என்று குற்றஞ்சாட்டினார்.
தம்மை நோக்கி வரும் விமர்சனங்களுக்கு எப்போதும் அஞ்சுவது கிடையாது என்றும் அண்ணாமலை குறிப்பிட்டார்.