ரகசியமாக 2-ம் திருமணம் சிக்கிய கில்லாடி இன்ஜினியர்.. தாலியைக் கழற்றி வீசி எறிந்த மனைவி..
Published : Oct 19, 2023 6:43 AM
ரகசியமாக 2-ம் திருமணம் சிக்கிய கில்லாடி இன்ஜினியர்.. தாலியைக் கழற்றி வீசி எறிந்த மனைவி..
Oct 19, 2023 6:43 AM
பெரம்பலூர் அருகே பதிவுத் திருமணம் செய்து குடும்பம் நடத்திய மனைவியை ஏமாற்றி, இரண்டாவது திருமணம் செய்த இன்ஜினியர் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், ஒகையூர் கிராமத்தைச் சேர்ந்த முத்துசாமி- சகுந்தலா தம்பதியர் மகளான சினேகா பி.எட். படிப்பு படித்து வருகிறார். இவருக்கு வாலிகண்டபுரம் வாலீஸ்வரர் கோவிலில் நேற்று இந்து முறைப்படி திருமணம் நடைபெற்றது.
எறையூரில் தனியார் திருமண மண்டபத்தில் திருமண வரவேற்பு நடந்தபோது, மண்டபத்திற்குள் திடீரென நுழைந்த இளம்பெண் ஒருவர், ஏற்கனவே தன்னை விக்னேஷ் பதிவு திருமணம் செய்துகொண்டு குடும்பம் நடத்தியதாகவும், தற்போது ரகசியமாக இரண்டாவது திருமணம் செய்திருப்பதாகவும் கூறியதால் மணமகள் வீட்டார் அதிர்ச்சி அடைந்தனர்.
தங்கள் வீட்டுப் பெண்ணை ஏமாற்றியதைக் கண்டு ஆவேசமடைந்த மணமகள் வீட்டாரும் உறவினர்களும், அந்த பெண்ணிடம் விவரத்தைக் கேட்டறிந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து மண்டபத்திற்குச் சென்ற மங்களமேடு அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் விஜயலட்சுமி உள்ளிட்ட போலீசார் மணமக்கள் உள்ளிட்ட அனைவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
கடலூர் மாவட்டம் கழுதூர் கிராமத்தைச் சேர்ந்த கார்த்திகா என்பவரை 2016 ஆம் ஆண்டு முதல் விக்னேஷ் காதலித்து வந்துள்ளார். இருவரும் பெற்றோரின் எதிர்ப்பை மீறி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 8ம் தேதி திண்டுக்கல் பத்திரப்பதிவு அலுவலகத்தில் நண்பர்கள் முன்னிலையில் பதிவு திருமணம் செய்து கொண்டனர்.
ஆவட்டி கிராமத்தில் வாடகைக்கு வீடு எடுத்து கார்த்திகாவுடன் குடும்பம் நடத்திய விக்னேஷ், வெளிநாடு சென்று விட்டு கடந்த மாதம் திரும்பி வந்து வந்து கார்த்திகாவுடன் அவ்வப்போது தங்கி இருந்துள்ளார்.
பெற்றோரை சந்தித்து விட்டு வருவதாக மேலக் கல்பூண்டி கிராமத்திற்கு சென்ற விக்னேஷ், குடும்பத்தார் மூலம் ரகசியமாக திருமண ஏற்பாடு செய்து ஆசிரியர் பயிற்சி கல்லூரி மாணவியான சினேகாவை திருமணம் செய்துள்ளார்.
விக்னேஷின் நண்பர் மூலம் இத்தகவலை தகவல் அறிந்த கார்த்திகா, தனது கணவனைத் தொடர்பு கொள்ள முடியாமல், திருமண மண்டபத்திற்கு நேரில் வந்து வரவேற்பு நிகழ்ச்சியை தடுத்து நிறுத்தியுள்ளார்.
இரண்டாவது மனைவி சினேகா அளித்த புகாரின் பேரில், திருமண மோசடியில் ஈடுபட்ட விக்னேஷ் உள்ளிட்ட ஐந்து பேர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விக்னேஷின் குடும்பத்தாரின் மோசடியால் மனம் நொந்த சினேகாவின் குடும்பத்தார் செய்வதறியாமல் கண்கலங்கி காவல் நிலையத்தில் காத்திருக்கும் நிலையில், 'என்னை ஏன் ஏமாற்றினாய்?' என தனது கழுத்தில் இருந்த தாலியை கழற்றி விக்னேஷின் முகத்தில் தூக்கி வீசினார் சினேகா.
பிளக்ஸ் பேனர் வைக்காமல், தோரணம் கட்டாமல், ஒலிபெருக்கி சத்தம் இல்லாமல் ஒரு சில உறவினர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுத்து இரண்டாவது திருமணம் செய்த இளைஞர் தற்போது குடும்பத்தோடு கம்பி எண்ணும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
பதிவுத் திருமணம் நடைபெற்ற விக்னேஷிற்கு கீழக்கல்பூண்டி கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட வருவாய் துறை அதிகாரிகள் எவ்வித விசாரணையும் மேற்கொள்ளாமல் முதல் திருமணச் சான்று எவ்வாறு வழங்கினர் என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் வாடகை கிடைத்தால் போதும் என மண்டபம் கேட்டு வருவோருக்கெல்லாம், எவ்வித விசாரணையும் இல்லாமல் இடம்கொடுத்த மண்டப உரிமையாளரிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது.