தெற்கத்தி டெர்மினேட்டர் கழுத்தை சிறைக்குள் இறங்கி அறுத்து வீசிய A 32 சென்னையில் கைது..! 27 ஆண்டுகள் கழித்து சிக்கினார்
Published : Oct 18, 2023 9:04 PM
தெற்கத்தி டெர்மினேட்டர் கழுத்தை சிறைக்குள் இறங்கி அறுத்து வீசிய A 32 சென்னையில் கைது..! 27 ஆண்டுகள் கழித்து சிக்கினார்
Oct 18, 2023 9:04 PM
27 வருடங்களுக்கு முன்பு நாகர்கோவில் கிளைச்சிறைக்குள் புகுந்து பிரபல ரவுடி லிங்கத்தை கழுத்தை அறுத்து கொலை செய்த கும்பலை சேர்ந்தவர் என்று சென்னையை சேர்ந்த செல்வம் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். ஏணிவைத்து சிறைக்குள் இறங்கி லிங்கத்தை கொலை செய்த 35 பேரில் நீண்ட காலம்
தேடப்பட்டவர் சிக்கிய பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு...
தெற்கத்தி டெர்மினேட்டர் என்ற அடைமொழியுடன் அழைக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்டத்தின் பிரபல ரவுடி லிங்கம் கடந்த 1996 ஆம் ஆண்டு ஏப்ரல் 9 ந்தேதி நாகர்கோயில் கிளைச்சிறைக்குள் வைத்து கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டார்
ஏணி வைத்து சிறைக்குள் பயங்கர ஆயுதங்களுடன் இறங்கிய 32 பேர் கொண்ட கூலிப்படை கும்பல் சிறை வார்டன் களை மிரட்டி லிங்கம் அடைக்கப்பட்டிருந்த அறையில் சாவியை பெற்று லிங்கத்தை 128 இடங்களில் வெட்டிக் கொன்றதாகவும், அவரது தலையை அறுத்து கையோடு வெளியே எடுத்துச்சென்று மீனாட்சிபுரம் பகுதியில் சாக்கடை கால்வாயில் வீசிச்சென்றதாகவும் தெரிவித்த போலீசார் இந்த வழக்கில் 31 பேர் கைது செய்யப்பட்டு அவர்களில் 16 பேருக்கு நீதிமன்றத்தின் மூலம் ஆயுள் தண்டனை பெற்றுக் கொடுத்ததாக கூறினர்.
ஒயின்ஷாப் அதிபர் பிரபு என்பவரின் கொலைக்கு பழிக்கு பழியாக செல்வாக்கு மிக்கோரின் ஆதரவுடன் சிறைக்குள் நிகழ்த்தப்பட்ட இந்த கொடூர கொலை சம்பவத்தில் தொடர்புடைய தமிழ்செல்வம் என்பவரை மட்டும் போலீசார் நீண்ட காலமாக தேடி வந்தனர்
இதே வழக்கிலிருந்து விடுதலையாகியிருந்த தாத்தா செந்தில் என்பவரை கடந்த வாரம் வேறு ஒரு வழக்கில் நாகர்கோயில் போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் 27 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த தமிழ் செல்வத்தின் இருப்பிடம் போலீசாருக்கு தெரியவந்தது. சென்னை பூந்தமல்லியில் உள்ள பேண்ஸி ஸ்டோரில் செல்வம் என்ற பெயருடன் வேலைபார்த்து வந்த தமிழ்செல்வத்தை தனிப்படை போலீசார் கைது செய்து நாகர்கோயில் அழைத்துச்சென்றனர்.
லிங்கம் கொலை சம்பவம் நடந்த போது தமிழ்செல்வத்துக்கு 27 வயது என்றும் அங்கிருந்து தப்பி சென்னைக்கு வந்தவர் கூட்டாளிகளுடன் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ளாமல். குற்ற சம்பவங்களில் சிக்காமல் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்த நிலையில் 54 வயதில் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.