​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பீஜிங்கில் நடைபெறும் 2 நாள் சர்வதேச மாநாட்டை தொடங்கிவைத்தார் ஷி ஜின்பிங்

Published : Oct 18, 2023 4:54 PM

பீஜிங்கில் நடைபெறும் 2 நாள் சர்வதேச மாநாட்டை தொடங்கிவைத்தார் ஷி ஜின்பிங்

Oct 18, 2023 4:54 PM

சீனாவின் பெல்ட் அண்ட் ரோடு திட்டத்தின் 10ம் ஆண்டு நிறைவை முன்னிட்டு சர்வதேச மாநாடு பீஜிங்கில் நடைபெறுகிறது.

கண்டம் விட்டு கண்டம் இணைப்பை ஏற்படுத்தி வர்த்தகத்தை பெருக்க, பெல்ட் அண்ட் ரோடு திட்டத்தை 2013-ம் ஆண்டு சீனா அறிவித்தது.

ஒரே பிராந்தியம், ஒரே சாலை என சீனாவில் கூறப்படும் இத்திட்டத்தின் கீழ் பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட பல நாடுகளில் சீனாவின் கடன் உதவி மூலம் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.

இத்திட்டத்தின் கீழ் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியாகவும் சாலை அமைக்கப்படுகிறது. மேலும், இந்தியாவின் அண்டை நாடுகளில் உள்ள துறைமுகங்களில் சீனாவின் போர் கப்பல்கள் நிறுத்தப்படுகின்றன.

இதனால் இந்திய இறையாண்மைக்கு அச்சுறுத்தல் என்பதால், இத்திட்டத்திற்கு தொடக்கத்திலிருந்தே இந்தியா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

இந்நிலையில், பெல்ட் அண்ட் ரோடு திட்டத்தின் 10ம் ஆண்டு நிறைவை ஒட்டி 2 நாள் சர்வதேச மாநாட்டை சீன தலைநகர் பீஜிங்கில் அதிபர் ஷி ஜின்பிங் தொடங்கி வைத்தார். இதில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உள்பட 130-க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

பீஜிங்கில் மாநாடு தொடங்குவதற்கு முன்பாக மாநாட்டு அரங்கில் உலகத் தலைவர்கள் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

முன்னதாக மாநாட்டில் பங்கேற்க சீனா வந்த உலகத் தலைவர்களுக்கு கலை நிகழ்ச்சிகளுடன் நேற்று இரவு அதிபர் ஷி ஜின் பிங் விருந்தளித்தார். விருந்துக்கு வந்த தலைவர்களை மனைவியுடன் சேர்ந்து ஷி ஜின் பிங் வரவேற்றார்.