மோதல்கள் மற்றும் போர் நிறைந்த உலகம் யாருக்கும் பயன் தராது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். டெல்லி யசோபூமியில் ஜி-20 நாடாளுமன்ற சபாநாயகர்களின் உச்சிமாநாட்டை பிரதமர் தொடங்கி வைத்தார்.
மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில் நடைபெறும் மாநாட்டில் ரஷ்யா, இத்தாலி, சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.
காலிஸ்தான் விவகாரத்தில் இந்தியாவுடனான தூதரக உறவில் சிக்கல் நீடிக்கும் நிலையில் கூட்டத்தை கனடா புறக்கணித்துள்ளது.
மாநாட்டில் உரையாற்றிய பிரதமர் மோடி, உலகளவில் ஒற்றுமையும், அமைதியும் நிலவ வேண்டும் என்றும், சகோதரத்துவத்துடன் அனைவரும் இணைந்து முன்னேறி செல்ல வேண்டிய நேரம் இது என்றும் கூறினார்.
பல ஆண்டுகளாக எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை இந்தியா எதிர்கொள்வதாக குறிப்பிட்ட பிரதமர், சுமார் 20 ஆண்டுகளுக்கு முன், இந்திய நாடாளுமன்றத்தை தீவிரவாதிகள் குறிவைத்ததை சுட்டிக்காட்டினார்.
மனித குலத்திற்கு எதிரான பயங்கரவாதம் எவ்வளவு சவால் நிறைந்தது என உலகம் தற்போது உணர்ந்துள்ளதாகவும் அவர் கூறினார்,