​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
போரை நீண்ட நாள் நீட்டிக்க ஹமாஸின் அதிரடி யுக்தி..! 'முடிந்தால் வந்து பார்' என இஸ்ரேலுக்கு மிரட்டல்..!

Published : Oct 13, 2023 6:44 AM

போரை நீண்ட நாள் நீட்டிக்க ஹமாஸின் அதிரடி யுக்தி..! 'முடிந்தால் வந்து பார்' என இஸ்ரேலுக்கு மிரட்டல்..!

Oct 13, 2023 6:44 AM

காஸா போரை நீண்ட நாட்களுக்கு நீட்டிக்க ஹமாஸ் தயாராக இருப்பதாக கூறியுள்ள இஸ்ரேல், ஹமாஸை ஒடுக்கும் வரை தாங்கள் ஓயப்போவதில்லை என்று தெரிவித்துள்ளது. ஆனால், காஸாவுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்துவது இஸ்ரேலுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தும் என்று ஹமாஸ் மிரட்டல் விடுத்துள்ளது.

ஹமாஸ் கடந்த 7-ஆம் தேதி தாக்குதலை துவக்கியதில் இருந்து பலியான இஸ்ரேலியர்களின் எண்ணிக்கை 1300! இதுதவிர தங்கள் வீரர்கள் 220 பேர் கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது. மறுபுறம், பாலஸ்தீன தரப்பில் 1203 பேர் இறந்ததாக அந்நாட்டு சுகாதாரத் துறை கூறியுள்ளது.

காஸா நகரின் மேற்கு பகுதியில் உள்ள அகதிகள் முகாமின் மீது இஸ்ரேல் நடத்திய ஏவுகணை தாக்குதலில் ஏராளமான கட்டிடங்கள் நொறுங்கின. இடிபாடுகளுக்கு நடுவே சிக்கி பாலஸ்தீனர்கள் 10 பேர் பலியாயினர்.

பதிலுக்கு ஹமாஸ் தரப்பில் நடத்திய ராக்கெட் வீச்சில் இஸ்ரேலின் தெற்குப் பகுதியில் உள்ள ஆஷ்கெலான் நகரில் கட்டிடங்களும், சாலையில் நின்றிருந்த வாகனங்களும் தீப்பற்றி எரிந்தன.

ஹமாஸ் போராளிகள் ராக்கெட் வீசுவதில் பின்பற்றும் யுக்தியை தாங்கள் புரிந்து கொண்டுவிட்டதாக இஸ்ரேலின் மூத்த ராணுவ அதிகாரி ரஃபி மிலோ கூறியுள்ளார். ஒரு நாளுக்கு 200 முதல் 400 ராக்கெட்டுகளை மட்டுமே ஹமாஸ் போராளிகள் ஏவுவதாக குறிப்பிட்டுள்ள அவர், நீண்ட நாட்களுக்கு போர் நடத்துவதற்காக இத்தகைய தந்திரத்தை ஹமாஸ் பின்பற்றுவதாக தெரிவித்துள்ளார்.

அதே போல, இஸ்ரேலின் மையப் பகுதியை நோக்கி ஒரு நாளில் ஓரிரு முறை மட்டுமே ஹமாஸ் ராக்கெட்டுகளை ஏவுவதாகவும் எந்த நேரத்தில் ராக்கெட் வரும் என்ற அச்சத்தில் இஸ்ரேலியர்களை வைத்திருக்கவே இந்த உபாயத்தை ஹமாஸ் கையாளுவதாகவும் இஸ்ரேல் கூறியுள்ளது.

ஹமாஸின் கடற்படை தளபதிகளில் ஒருவரான அபு ஷமாலா, தெற்கு இஸ்ரேல் மீதான தாக்குதலை படம்பிடித்து இணையத்தில் ஒளிபரப்பிய முஸ்தஃபா ஷாஹின் ஆகியோரை தாங்கள் தாக்குதல் நடத்தி கொன்றுவிட்டதாக கூறியுள்ள இஸ்ரேல், ஹமாஸ் குழு விரைவில் முற்றிலுமாக ஒடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

ஆனால், காஸாவில் இஸ்ரேல் படைகள் நுழைந்தால் அதை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாக ஹமாஸ் கூறியுள்ளது. தங்களிடம் ஏராளமான வீரர்கள் இருப்பதாகவும் ஜோர்டான், லெபனான் உள்ளிட்ட இடங்களில் இருந்து தங்களை ஆதரித்து இஸ்ரேலுக்கு எதிராக போர் புரிய பேராளிகள் தயாராக இருப்பதாகவும் ஹமாஸ் கூறியுள்ளது.

போரின் துவக்கத்தில் 1200 வீரர்களை அனுப்பி, தான் ஒரு வல்லரசு என்று இஸ்ரேல் உருவாக்கி வைத்திருந்த மாயையை தகர்த்துவிட்டதாக தெரிவித்துள்ள ஹமாஸ், காஸா பூந்தோட்டமல்ல என்றும் காஸாவுக்குள் நுழைவது இஸ்ரேலியர்களுக்கு பலத்த சேதத்தை ஏற்படுத்தும் என்றும் மிரட்டல் விடுத்துள்ளது.

ஹமாஸ் தாக்குதலில் தங்கள் நாட்டினர் 2 பேர் கொல்லப்பட்டதால் கொந்தளித்துள்ள ஃபிலிப்பைன்ஸ் முன்னாள் அதிபர் ரோட்ரிகோ துதெர்டே, ஹமாஸ் போராளிகளை நொறுக்கி, உலகின் மிகப் பெரிய இடுகாடாக காஸாவை மாற்றுமாறு இஸ்ரேலை வலியுறுத்தியுள்ளார்.

மறுபுறம், கேலிக்குரிய நபர் அமெரிக்க அதிபராக இருப்பதால் உலகம் முழுவதும் தீவிரவாதிகள் ஆட்டம் போடுவதாக முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் சாடியுள்ளார். சர்வதேச அரசியலை கையாளத் தெரியாத ஜோ பைடனே இஸ்ரேல் மீதான தாக்குதலுக்கு காரணம் என்று கூறியுள்ள டிரம்ப், இஸ்ரேலிய அரசு ஹமாஸ் தாக்குதலை எதிர்கொள்ள தயாராக இல்லாமல் மெத்தனமாக செயல்பட்டதாகவும் கூறியுள்ளார்.

இதனிடையே, இஸ்ரேல் தனது போர்க்கப்பல்களில் பயன்படுத்துவதற்காக ஜெர்மனி நாட்டிடம் இருந்து வெடிபொருட்களை கோரியுள்ளது. இது குறித்து பரிசீலிக்கப்படும் என்று கூறியுள்ள ஜெர்மனி, பாலஸ்தீனத்துக்கு வழங்கி வந்த நிதி உதவிகளை நிறுத்தியுள்ளது. ஹமாஸ் நடத்திய தாக்குதலை பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ் கண்டிக்காதது வெட்கக்கேடானது என்று தெரிவித்துள்ள ஜெர்மன் பிரதமர் ஓலாஃப் சோல்த்ஸ், யூதர்களுக்கு எதிரான இனப்படுகொலைகளை நிகழ்த்திய நாடு என்ற வகையில், இஸ்ரேலுக்கு தாங்கள் ஆதரவாக இருக்க வேண்டிய கடமை தங்களுக்கு இருப்பதாக கூறியுள்ளார்.