பீகாரில் விபத்துக்குள்ளான ரயிலில் மீட்புப் பணிகள் முடிவடைந்து, மாற்று ரயில் மூலம் பயணிகள் அசாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
டெல்லி ஆனந்த் விகார் முனையத்திலிருந்து அசாமின் காமாக்யா நோக்கிச் சென்றுகொண்டிருந்த வடகிழக்கு விரைவு ரயில் பீகாரின் பக்சர் மாவட்டம், ரகுநாத்பூர் ரயில் நிலையம் அருகே இரவு 9.30 மணியளவில் தடம் புரண்டது.
ரயிலின் 21 பெட்டிகள் தடம்புரண்டதில் 4 பயணிகள் பலியாகினர். 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்நிலையில் விபத்துக்குள்ளான ரயில் பெட்டிகளில் மீட்பு பணிகள் முடிவடைந்து, மாற்று ரயில் மூலம் பயணிகள் காமாக்யாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும், ரயில் தண்டவாள சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும் ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் எக்ஸ் தளத்தில் தகவல் வெளியிட்டுள்ளார்.
விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதனிடையே, ரயில் விபத்துக்குள்ளான இடத்தில் நடைபெற்று வரும் சீரமைப்பு பணிகளை மத்திய அமைச்சர் அஷ்வினி சௌபே நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.