இஸ்ரேல் எல்லையில் சைரன்ஒலி வெடிகுண்டு சப்தம்..!
Published : Oct 11, 2023 12:48 PM
இஸ்ரேலுக்கும், ஹமாஸ் போராளிகளுக்கும் இடையே நடந்து வரும் போர் 5-வது நாளை எட்டியுள்ள நிலையில், இரு தரப்புக்குமான மோதலில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்தை கடந்துள்ளது.
அல் அக்ஸா மசூதியை முன்வைத்து ஹமாஸ் இயக்கத்தினர் கடந்த 6ம் தேதி இஸ்ரேல் மீது தாக்குதலைத் தொடங்கினர். இது இருதரப்புக்கும் இடையிலான போராக மாறியது.
இஸ்ரேலின் தெற்கு நகரமாக அஷ்கெலானில் உள்ள பொதுமக்கள் மாலை 5 மணிக்குள் வெளியேறுமாறு ஹமாஸ் அமைப்பினர் கெடு விதித்திருந்தனர். குறிப்பிட்ட நேரம் கடந்த பின் அடுத்தடுத்து ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தினர்.
இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் நிதி விவகாரங்களை முழுமையாக நிர்வகித்து வந்த ஜவாத் அபு ஷமாலா இஸ்ரேல் தாக்குதலில் உயிரிழந்தார். ஹமாஸ் போராளிகளிடமிருந்து நீண்ட சண்டைக்குப் பின்னர் கிப்புட்ஸ் என்ற இடத்தை இஸ்ரேலியர்கள் கைப்பற்றினர்.
கிப்புட்ஸ் நகரில் பெண்கள், குழந்தைளை ஹமாஸ் அமைப்பினர் தலையைத் துண்டித்து படுகொலை செய்து தீயிட்டு எரித்ததாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
75 ஆண்டுகால வரலாற்றில் இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட மிக மோசமான தாக்குதல் என்று குறிப்பிட்டுள்ள அந்நாட்டு பிரதமர் நெதன்யாகு, ஹமாஸ் அமைப்பை ஐஎஸ் தீவிரவாத அமைப்புடன் ஒப்பிட்டுள்ளார். காஸா எல்லைப் பகுதிகளை ஹமாஸ் அமைப்பினரிடமிருந்து மீட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, காசா பகுதியைச் சுற்றியுள்ள இஸ்ரேலில் சுமார் ஆயிரத்து 500 ஹமாஸ் போராளிகள் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ராணுவம் தெரிவித்துள்ளது.
தொடர்ந்து ராக்கெட் குண்டுகளை வீசி ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். இதனால் அந்த நகரம் முழுவதும் அவ்வப்போது சைரன் சப்தம் ஒலித்துக் கொண்டே இருந்தது.
இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக காஸா நகரத்தின் பல்வேறு நிலைகளில் இஸ்ரேல் ராணுவத்தினர் வான்வழித் தாக்குதலில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் 100க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்களை பிணைக் கைதிகளாக ஹமாஸ் இயக்கத்தினர் பிடித்து வைத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.